பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை (தங்க மயமான கிரவுஞ்சமலை ஊடுருவும்படியாகத் தொளைத்த கூர்மையையுடைய வேலாயுதத்தைக் கொண்ட மன்னனே! போகத்துக் குரிய கடம்பமலர் மாலையை அணிந்த மார்பை உடையவனே வாயால் பேசுவதை ஒழிந்து மெளனத்தை அடைந்து, நின்னைப் பலகால் உணர்ந்து உணர்ந்து முயற்சி யாவும் ஒருமுகப்பட்ட நிர்க்குண நிலையைப் பூண்டு என்னை மறந்திருந்தேன்; அப்போது இவ்வுடம்பு உணர்ச்சியற்று இறந்தே போய்விட்டது. சொன்னம் - தங்கம். வை - கூர்மை. நிர்க்குணம் - குணம் அற்றது.) மெளனத்தை உற்று என்றது வாய் பேசுவதை ஒழிந்த நிலை; நிர்க்குணம் பூண்டு என்றது மனம் சிந்தித்தலை ஒழிந்த நிலை; இறந்தேவிட்டது இவ்வுடம்பே என்றது உடம்பு உணர்ச்சியை மறந்த நிலை. இவை முறையே வாங் மெளனம், மனோ மெளனம், காஷ்ட மெளனம் எனப் பெறும். வாயால் பேசுவது நின்று மனத்தால் சிந்திப்பதும் நின்றால் உடம்பு தானே உணர்விழந்துவிடும். நான் என்ற உணர்வும் அற்றுப் போகும். இதையே சமாதி நிலை என்று கூறுவர் பெரியோர். ‘உல்லாச நிராகுல யோகஇதச் சல்லாப விநோதனும் நீஅலையே? எல்லாம்அற என்னை இழந்தநலம் சொல்லாய், முருகா! சுரபூபதியே!” என்ற அநுபூதிப் பாட்டில், 'என்னை இழந்த நலம்' என்று குறிப்பிப்பதும் இந்த நிலைதான். 115