பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் உடம்பு இருந்தும் இல்லாது போன்ற நிலையை, கருவி கரணங்கள் கழன்று உடம்பின் வாசனை எல்லாம் போய்ப் புளியம்பழம் ஒட்டோடு ஒட்டாமல் இருப்பது போன்ற அநுபவ நிலையை, அருணகிரிநாதர் முன்பாட்டில் சொன்னார். "இறந்தே விட்டது இவ்வுடம்பே' என்று முடித்த அவருக்கு, உடம்பை விட்டு இறந்தே போகின்ற மக்களைப் பற்றிய நினைப்பு வந்தது. வந்தவுடன் இரக்கம் பிறந்தது. கோபமும் இரக்கமும் உடம்பைவிட்டுச் செல்லவேண்டிய மக்கள், உடம்பு இருக்கும் பொழுதே, நிச்சயமாக உயிர் உடம்பை விட்டுப் போகப் போகிற தென்று உணர்ந்து, அதனிடம் உள்ள பற்றை அகற்றிவிட்டால் ஒருவிதமான துன்பமும் இல்லை. ரெயில் வருகிறதென்று தெரிந்தவுடனே மூட்டை முடிச்சுக்களை எல்லாம் ஆயத்தமாக எடுத்து வைத்துக் கொண்டால் வந்தவுடன் ஏறிக் கொண்டுவிடலாம். வண்டி வந்த பிறகு மூட்டை முடிச்சைக் கட்ட ஆரம்பித்தால் வண்டி நகர்ந்துவிடும். உடம்பு இருக்கும் பொழுதே அதனிடம் பற்று இல்லாமல் இருந்தால் பின்னால் துன்பம் இல்லை. உடம்பினிடம் உள்ள பற்றை விடுவது இருக்கட்டும். உடம்பினால் உழைத்துச் சேமித்து வைத்துள்ள பொருள்களிடம் கொண்டுள்ள பற்றையே விடமுடியவில்லையே! இந்த நினைப்பு அருணகிரியாருக்கு வந்தது. சிறிது கோபமும் உண்டாயிற்று. நல்லவர்களுக்குக் கோபம் வந்தால் கல்லால் அடிக்க மாட்டார்கள்; சொல்லால் அடிப்பார்கள். பொருளின் மேல் அழுத்தமான பற்றை உடையவர்களைப் பார்த்து, மதியிலிகாள்!