பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி உண்ணஒட் டாது,உங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் அடிப்பிறகே? 'நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தம் - பொருள் - எதற்குப் பயன்படும்? நீங்கள் இறந்த பிறகு உங்களுடன் தொடர்ந்து வருமா? அதைப் புதைத்து வைக்கிறீர்களே அது இப்போதும் பயன்படவில்லை; இனிமேலும் பயன்படாது' என்கிறார். வல்வினை நோய் மக்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பொருள் அப்படியே அவர்களுக்குப் பயன்படும் என்று சொல்ல இயலாது. கோடி கோடியாகப் பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறவன் தன் வீட்டில் ஒரு கவளம் உண்ண முடிவதில்லை; வயிற்று வலி, வயிற்று வலி என்று துடித்துக் கொண்டே இருக்கிறான். ஒருவன் அமெரிக்கா போகிறான். அவன் அங்கே தங்கப் போகிற ஆறு மாத காலத்திற்கு வேண்டிய பணத்தை டாலர்களாக மாற்றி அந்நாட்டில் உள்ள பாங்கில் போட்டுவிடுகிறான். அவன் தனி விமானத்தில் போகிறான். அவன் வரப்போகிறான் என்று அமெரிக்க விமான நிலையத்தில் பலர் காத்து நிற்கிறார்கள். இங்கே புறப்பட்டவன் அங்கே போய்ச் சேரவில்லையே! கெய்ரோ போவதற்குள்ளேயே மார்படைக்கிறது; இறந்து போகிறான். அவன் விமானத்தில் ஏறுவதற்கு முன் டாக்டர்கள் அவனைப் பரிசீலனை செய்து பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு இப்படி ஆகும் எனத் தெரியவில்லையே! அது எதனாலே வந்தது தெரியுமா? அதற்குக் காரணம் வல்வினை நோய் என்கிறார் அருணகிரியார். "ஒரு வியாதியும் இல்லை. நேற்று வரை ஜூரம், தலைவலி என்று கீழே படுத்தது இல்லை. ஆளைப் பார்த்தால் கல்லுக் குண்டு போல் இருந்தான். அவன் இன்று செத்துப் போய் விட்டானே! நம்ப முடியவில்லையே!' எனச் சொல்கிறோம். நோய் இல்லை; நொடி இல்லை; ஆனால் எப்படி மரணம் அடைந்தான் அருணகிரியார் சொல்கிறார்; "நீ சொல்கிற நோய் அல்ல அது. நீ சொல்கிறது உடம்புக்கு வருகிற நோய். இது வல்வினை நோய். பொல்லாத ஊழ்வினை நோய்' என்கிறார். 122