பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2



   இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியையும் காண்கிறோம். முருகன் அருளால் தாம் பாடும் ஆற்றல் பெற்றதையும், எல்லாவற்றையும் மறந்து நிற்கும் அநுபவம் பெற்றதையும் பாடுகிறார்.


   “நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய
   நிர்க்குணம்பூண்டு
   என்னை மறந்திருந்தேன்! இறந்தே
   விட்டது இவ்வுடம்பே" என்ற அநுபவம் மிக மிக உயர்ந்தது. உலகில் உள்ள மக்களிடம் பற்றையும், பொருள்களிடம் ஆசையையும் வைத்த மனம் முருகனை நிலையாக நினைக்கக்கூடத் தெரிந்து கொள்ள வில்லை. ஒரு கணத்தில் எண்பது கோடி நினைந்து எண்ணும் வேகம் உடையது அது. அத்தகைய மனம் ஒன்றையே நினைப்பது அருமை. நினைந்து நினைந்து பழகிப் பின்பு ஒன்றை உணர்வது பின்னும் அருமை. முருகனை உணர்ந்து உணர்ந்து உள்ளத்தின் ஆற்றல் முழுவதும் ஒருமுகப்பட்டால் உள்ளமே நின்றுவிடுகிறது; தன்னையே மறக்கும் நிலை வருகிறது; அங்கே உடம்புக்கு என்ன வேலை?


   இந்த அநுபவம் அருணகிரிநாதருக்குக் கிடைத்தது. நமக்கும் இது கிடைக்காதா என்று அன்பர்களுக்கு ஆர்வம் உண்டாக வேண்டுமென்றே இதைச் சொல்கிறார்.


   இத்தகைய அநுபவத்தை நுகர்ந்த அவர் இனிப் புதிதாகப் பெறப் போகிறவரைப் போல, மனத்தைப் பார்த்து ஒரு பாட்டில் பேசுகிறார். பக்குவம் பலவகை. முருகன் திருவடியிலே அன்பு வைத்து உருகும் ஒருவன் தன் மனத்தைத் துணையாக்கிக் கொண்டு இன்ப நிலையை அடைய முயலுகிறான். அவன் சொல்வது போல இருப்பது அந்தப் பாட்டு. 'இக்கரை கடந்து வேலாயுதனைத் துணைக்கொண்டு அக்கரைக்குப் போகலாம் வா, மனமே' என்று அழைப்பவர் போலப் பாடுகிறார்.2