பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அந்தச் சொல்லுக்குத் தவறு என்றே பொருள். அந்தப் பொருளில் தான் இந்தப் பாட்டில் உபயோகிக்கிறார் அருணகிரியார். யாவரும் மரணம் என்றால் அஞ்சுகிறார்கள். அவர், 'அந்தப் பயம் நமக்கு இல்லை" என்று பெருமிதத்தோடு சொல்கிறார். பல பல இடங்களில் நான், எனக்கு என்று சொல்லி வந்தவர் இங்கே, 'நமக்கு என்கிறார். அப்பர் சுவாமிகள் மிகமிகப் பணிவு உடையவர். "குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்' என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் இறைவன் திருவருட் பேற்றைப் பெற்ற பெருமிதத்தில், "நாம்ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று மிடுக்கோடு பாடுகிறார். எல்லோரும், "ஐயோ!' என்று அலறும் இடத்தில் அவர், 'நாம்' என்று தலை நிமிர்ந்து பேசுகிறார். அதுபோலவே அருணகிரிநாதர், "மரணம் எனக்கு இல்லை' என்று சொல்ல வேண்டியவர், 'மரணம் என்ற தவறு நமக்குக் கிடையாது' என்று பேசுகிறார். அது அவருடைய பெருமிதத்தைக் காட்டுகிறது. தவறாவது என்ன? மனிதன் வாழ்நாளில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் அல்லாத காரியங்களைச் செய்தால் தவறு செய்தான் என்று சொல்வோம். அந்தப் பிழைக்கு என்ன பயன்? மற்றொரு பிழை பயனாக விளையும். தினை விதைத்தால் தினை விளையும்; வினை விதைத்தால் வினை விளையும். பிழைக்குப் பிழைதானே விளையும்? வாழ்நாளில் செய்ய வேண்டிய காரியங்கள் அல்லாதவற்றைச் செய்தால் தவறு ஆகிய மரணம் சம்பவிக்கும். "மரண ப்ரமாதம் நமக்கு இல்லையாம்' என்று அருணகிரியார் சொல்கிறாரே, மரணம் இல்லாமல் நாம் இருக்க முடியுமா? மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது ஒன்று உண்டா? இதைச் சற்று ஆராய்ந்து பார்க்கலாம். மரணம் என்பது யாது? உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. தாய் வயிற்றில் கருவாகிப் பின்பு அந்தக் கரு முதிர்கிறது; வெளிவந்து நிமிர்ந்து வளர்ந்து 138