பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2

'14-ஆவது பாட்டுப் பாடுகிறபோது அப்படி இருந்தார். 19-ஆவது பாடலைப் பாடுகையில் உயர்ந்துவிட்டார் என்று சொல்லலாமா? இதற்கு முன்பும் இத்தகைய அநுபவங்களைச் சொல்லியிருக்கிறார். கந்தர் அலங்காரத்தின் முதற் பாட்டே,

"பிரபஞ்சம் என்னும்
சேற்றை கழிய வழிவிட்டவா!"

என்றல்லவா சொல்கிறது? பிரபஞ்சச் சேற்றை இறைவன் அருள் நீரினால் கரைத்துப் போக்கிவிட்டவர் அருணகிரிநாதர், அவருக்குப் பாச நெஞ்சு ஏது? ஐவரினால் சுழற்சி ஏது?

உலக வாழ்க்கையில் ஈடுபட்டு ஐவர் அடிக்கும் கூத்திலே சிக்கிச் சுழலும் மனமுடையார்களுக்காகப் பாடிய பாட்டு இது. அவர்கள் வாயில்லாப்பூச்சிகள் என்ற இரக்கத்தால், அவர்களுக்காகப் பாடியது; அவர்களைத் தாமாகவே கருதிப் பாடியது. இத்தகைய வேண்டுகோள் பாடல்களை நாம் முருகன் சந்நிதானத்துக்குச் சென்று வழிபடும்போது பாடி உருக வேண்டும்.

இப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் இரண்டு அருணகிரியார் தாம் பெற்ற பேற்றைச் சொன்னவை; ஒன்று தம் மனத்தை நோக்கிச் சொல்வதாக அமைந்தது; மற்றொன்று பிரார்த்தனையாக உள்ளது. எஞ்சிய மூன்றும் உலகத்தவரைப் பார்த்து இன்னவாறு ஒழுகுங்கள் என்று உபதேசம் செய்யும் முறையில் இருப்பது. அறம், பொருள், வீட்டுநெறி என்ற மூன்று திறத்தில் இந்த உபதேசங்கள் அமைந்துள்ளன. தாம் ஈட்டியவற்றைப் பிறருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்று சொல்கிறார். ஈகை என்பது பொருள் நிரம்பியவருக்கு மாத்திரம் உரியதன்று. யாரும் அறம் செய்யலாம். தாம் தாம் பெற்றதைப் பிறருக்கும் இட்டு உண்ணுவதே அறம். தாம் உண்ணுவது சிறிதாயினும் அதிலும் ஒரு சிறு பங்கைப் பிறருக்கு வழங்க வேண்டும். இந்தக் கருத்துக்களை இரண்டு பாடல்களில் வெளியிடுகிறார்.

"தானம் என்றும் இடுங்கோள்"

என்று பொதுவாகச் சொன்னவர்,

4.