பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு உருவம், வண்ணம் எதுவும் தெரியாமல் தவித்த நமக்குச் சூரியன் ஒளி கொடுத்துப் பொருள்களின் உருவம், வண்ணம் எல்லாம் தெரிந்துகொள்ளும்படி செய்கிறான்; இருளினால் ஏற்படுகின்ற துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கிறான். அதுபோலவே தேவர்களுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற அகங்காரமாகிய இருள் நீக்கத்திற்கு எம்பெருமான் ஞான சூரியனாக இருக்கிறான். அகங்கார மமகாரங்களால் தலைதருக்கி இருக்கின்ற தேவர்களின் உள்ளத்தில் அறியாமை இருள் சூழும்போது துன்பப்படுகிறார்கள். அவர்களது துன்பத்தைப் போக்கும் எம் பெருமான் அவர்களது அறியாமை இருளை நீக்கும் சூரியனாக இருக்கிறான். ஆகவே, சுரபாஸ்கரனே! என்கிறார். 'எனக்கு மரணமாகிய தவறு கிடையாது. மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெறுவதற்கு எனக்குத் துணையாக இருப்பன வேலும் மயிலும். தவறான காரியங்களை விலக்கு என்று மயிலும், தவறு அல்லாத காரியங்களைச் செய் என்று ஞான வேலும் போதிக்கின்றன. இவை இரண்டும் எனக்குத் துணையாக இருப்பதனால் நான் நல்ல நெறியில் செல்கிறேன். நன்னெறியில் செல்ல எனக்குத் துணையாக இருக்கும் வேலையும் மயிலையும் உடைய எம்பெருமானாகிய நீ வீரத்தினாலும் ஈகையினாலும் படைத்த பெரும் புகழை உடையவன். உன்னுடைய வீரப் பிரதாபத்திற்கு அடையாளமாக இந்திராணியின் கழுத்தில் மங்கல நாண் இருந்து கொண்டிருக்கிறது. அறியாமை இருளைப் போக்கிக் கொள்ளும் முயற்சி உடையவர்களுக்குச் சாதன அருளை வழங்கும் கிருபாகரனாக விளங்குகிறாய். இந்த முயற்சி உண்டான பிற்பாடு ஞானத்தைக் கொடுக்கும் ஞானகரனாகவும் நீ இருக்கிறாய். அடியேனுடைய அறியாமை இருளை மாத்திரம் போக்குகின்ற ஞான ஒளியை நீ கொடுக்கவில்லை. தேவர்களுடைய அறியாமை இருளையும் நீக்கும் சுர பாஸ்கரனாக நீ இருக்கிறாய். நின் அருளாலேயே மரணப்ரமாதம் நமக்கில்லையாம்' என்று பெருமிதத்தோடு நமக்கு அருள் கொடுத்த ஆண்டவனிடத்திலே அருணகிரியார் சொல்கிறார். 153