பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் முருகன் வள்ளி நாயகியை மணம் செய்து கொண்டான். வள்ளியை நினைக்கும்போது அருணகிரி நாதருக்குப் பேரின்ப நினைப்பும் சேர்ந்து வருவதைப் பல பாடல்களில் பார்த்தோம். இப்பொழுது வள்ளியின் வரலாற்றைச் சொல்லித் தமிழின் சிறப்பையும் சொல்ல வருகிறார். தமிழ்ப் பெண் வள்ளியிடம் ஈடுபட்டமையால் தமிழ் மொழியினிடம் மிக்க விருப்பம் உடையவனாக முருகன் இருக்கிறான். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன். முருகன், வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையை அணி கின்ற குழலை உடைய வள்ளியை வேட்டவன்; மணம் புரிந்து கொண்டவன். மனைவியின் வீட்டை வேட்டகம் என்று சொல்வர். வேள்வி என்பது திருமணத்துக்கும் பெயர். வேட்டல் என்பதற்கு விரும்புதல் என்பதும் ஒரு பொருள். தாய் தகப்பனார் விரும்பிப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வது ஒரு முறை. ஆண், பெண்ணைப் பார்த்து விரும்பிக் கல்யாணம் செய்து கொள்வதும் உண்டு. பெண், ஆணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. இங்கே முருகப் பெருமான் வள்ளியைத் தானே வேட்டு அடைந்தான். தேவசேனையின் கல்யாணத்துக்கும் வள்ளி கல்யாணத்துக்கும் வேறுபாடு உண்டு. முருகப் பெருமான் சூரனைச் சங்காரம் செய்து தம் வாழ்வை மீட்டும் பெறச் செய்ததற்கு நன்றி அறிதலாக ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்திராதி தேவர்கள் நினைத்தார் கள். எம்பெருமானுடைய திருமணக் கோலத்தைக் கண்டு களிக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. தன் பெண்ணாகிய தேவ சேனையைத் திருமணம் செய்து வைக்க விரும்பினான் இந்திரன்.