பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் சேய்மையும் அணிமையும் 'நமக்கு அந்த ஒளியிலே ஒன்றும் தெரியவில்லையே!” என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த ஒளியே நமக்குத் தெரிய வில்லை. ஒரு பொருளின் அருகில் இருந்தும் அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். நமது பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் நாம் சென்னையில் வாழ வில்லையா? யாரேனும் விசாரித்துக் கொண்டு வந்தால், "எனக்குத் தெரியாது. நீங்கள் விசாரித்துப் பாருங்கள்" என்று சொல்கிறோம். பல ஆண்டுகளாக அங்கே வசித்துக் கொண்டிருந்தும் விசாரிக்க வில்லை; வந்து ஐந்து நிமிஷம்கூட ஆகாத ஒருவரைப்போய் விசாரிக்கச் சொல்கிறோம்! அவர் நமது வீட்டுக்கு அருகில் இருப்பவராக இருப்பினும் நமக்கு வெகுதூரத்தில் இருப்பவராக ஆகிறார். சேய்மை, அணிமை என்பது கண்ணாலே அளந்து பார்க்கும் அளவு என்று பொதுவாகச் சொல்கிறோம். கருத்தினால் சேய்மையும் அணிமையும் அமைவது உண்டு. வெகுதூரத்தில் இருக்கிற ஒருவனைச் சுட்டுகிறபோது, 'அவன்' என்று சொல்கிறோம். அருகில் இருப்பவனை, "இவன்' என்று சொல்கிறோம். அது, அவன், அவள் என்பவை சேய்மைச் சுட்டு. புறநானூற்றில், 'இளையன் இவன் என உளையக் கூறி' என்று வருகிறது. அங்கே, இவன் என்று சுட்டியவன் நெடுந்துரத்தில் உள்ளவன். அவனை, அவன் என்னாமல் இவன் என்று சொல்லலாமா? அதற்கு உரையாசிரியர் நியாயம் கூறுகிறார். "இவன் என்றார், தம் கருத்துக் கண் அணுமையான்' என்று உரை எழுதுகிறார். ஆண்டவன் மனத்திற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறானா தலின், 'அவன், அவன்' என்று குறிப்பிடுவது மரபு. ஞான சம்பந்தப் பெருமான் அவன் தம் மனத்தில் உறைபவனாதலால், “பெம்மான் இவன் அன்றே" என்றார். ஆண்டவனைப் பார்த்து “இவன்' என்று யார் சுட்டுவார் கள்? “அவன், அவன்” என்று வேதம் சொல்ல, 'அவன், அவன்' என்றே முனியுங்கவர்கள் எல்லாம் சொல்ல, "அவன், அவன்' என்று நம் போன்றவர்கள் சொல்ல, 'அவன் அன்றி ஓரணுவும் அசை யாது' என்று பழமொழியும் சொல்ல, "இவன்' என்றார் அவர். 3.79