பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! அவிரோத ஞானம் ஞானம் என்பது அறிவு. உங்கள் வீட்டின் எண் பன்னிரண்டு என்று நான் அறிந்தால் அதுவும் ஒரு வகை ஞானந்தான். இனிப்புப் பண்டத்தை வாயில் போட்டு உண்டு, இனிக்கிறது என்று அநுபவித்துச் சொன்னால் அதுவும் அறிவுதான். இந்த அறிவெல்லாம் உலகியலறிவு. இத்தகைய அறிவைக் கொண்டு நாம் உலகிலுள்ளவற்றைப் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இவன் வேண்டியவன், இவன் வேண்டாதவன், இவன் நம் சாதி, இவன் வேறு சாதியைச் சேர்ந்தவன், இது ஆண், இது பெண் என்றெல் லாம் பிரித்துப் பிரித்து அறிகிறோம். இது நமக்கு வேண்டும், இது நமக்கு வேண்டாம் என்ற வேறுபாடு காண்கிறோம். இது பேத ஞானம்; இதையே விரோத ஞானம் என்றும் சொல்லலாம். எமனுக்குக் கூற்றுவன் என்று ஒரு பெயர். அவன் உடம்பையும் உயிரையும் கூறுபோட்டுப் பிரிப்பதனால் அப்பெயர் பெற்றான். உலகில் உள்ளனவற்றை எல்லாம் கூறு போட்டுப் பிரித்துப் பார்க்கின்ற பேத ஞானம் உடைய நாம் கடைசியில் கூற்றுவன் கையிலே சிக்கிக் கொள்கிறோம். கூறு படுத்தும் ஞானம் கூறு படுத்தும் கூற்றுவன் கையில் நம்மைச் சிக்க வைத்து விடுகிறது. இறைவனுடைய திருவடிக்கண்ணே உண்மையான அன்பு செய்கிறவர்களுக்கு அபேத ஞானம் வரும்; எல்லா உயிர்களிடத் திலும் சமமான தயை பிறக்கும். வேறுபடுத்திப் பார்க்கத் தோன்றாது. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில் முருகனை, “சேரா நிருதர் குலகலகா' என்று அதன் ஆசிரியர் பாடுகிறார். நிருதர்களாகிய அசுரர்கள் தாமும் ஒன்று சேர மாட்டார்கள். பிறரையும் ஒன்று சேர விட மாட்டார்கள்; இணையவேண்டியவைகளையும் பிரித்துத் துன் புறுத்தும் நாட்டமுடையவர்கள். அந்த உணர்ச்சி உடையவர்கள் யாவருமே அசுர பரம்பரையினர் என்று சொல்லிவிடலாம். அணைக்கும் கை தாயின் கை, அமரர் கை; தெய்வக் கை. பிரிக்கும் கை பேயின் கை; அசுரர் கை. இறைவனிடம் தொண்டு பூண்டவர்கள் அணைக்கும் கையும் இணைக்கும் மனமும் உடை யவர்கள்; கண்ட ஞானம் இன்றி அகண்ட ஞானம் பெற்றவர்கள். 227