பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அவிரோத ஞானிகள் அவர்கள்; யாரிடமும் பகையின்றி, வெறுப் பின்றி வாழ்கிறவர்கள். அவிரோத உந்தியார் என்ற ஞான நூல் ஒன்று தமிழில் உண்டு. செந்தில் வேலனுக்குத் தொண்டு என்றாலும் அவிரோத ஞானம் என்றாலும் ஒன்றுதான். ஒவ்வொரு நிலையிலிருந்து பார்க்கும்போது ஒவ்வொரு வகையாகத் தோற்றும். ஆனாலும் வேறுபாடு இல்லை. இறைவன் தொண்டும் உயிர்களிடம் அன்பும் முருகனுடைய தொண்டினால், உலகத்து ஆருயிர்கள் அத்தனையும் ஒன்று என்ற நினைப்பு வந்தது. ஆண்டவனுக்கு அவ்வுயிர்களெல்லாம் குழந்தைகள் என்று உணர்ந்து, பிரித்துப் பிரித்துப் பார்க்கின்ற தன்மை மாறி, எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கின்ற அவிரோத ஞானம் வந்தது. 'அந்த வாள் என் கையில் இருக்கிறது” என்று அருணகிரியார் பேசுகின்றார். ஆண்டவனுக்குத் தொண்டு செய்பவர்கள் உயிர்களுக்கும் தொண்டு செய்து அன்பு பாலிப்பார்கள். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டியவை. தகப்பனிடம் அன்பு செய்பவர்கள் யாரேனும் அவனுடைய குழந்தையை அலட்சியம் செய்யலாமா? சிவபெருமானிடம் பக்தியோடு தொண்டு புரியும் பிரம்மா அப்படித்தான் முருகனை அலட்சியம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அவனுடைய தலைக்கிறுக்கை அடக்கினான் முருகன். இறைவனிடம் அன்பு உள்ளவர்கள் என்றால் அவனுடைய குழந்தைகளாகிய உலகிலுள்ள உயிர்களிடத்திலும் அன்பு செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு அருள் செய்வான். அவன் வேறு, இவன் வேறு என்கிற விரோத ஞானம் போய், எல்லோரும் ஆண்டவனுடைய குழந்தைகள் என்கிற அவிரோத ஞானத்தால் காலனையும் வென்றுவிடலாம். 'வந்து பார்' அருணகிரியார், "என்னிடத்தில் தொண்டாகிய வாள் இருக்கிறது. அவிரோத ஞானம் என்கிற வாளும் அதுதான் என்கிறார். 228