பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் வேலை எதுவோ அதைச் செய்தால்தான் கை வாழ்ந்தது என்று சொல்லலாம். உடம்பு முழுவதும் வாழ்வதாவது, உடம்பிலுள்ள அங்கங்கள் எல்லாம் தத்தமக்குள்ள ஒழுக்க முறையில் நின்று உத்தமமான காரியங்களைச் செய்வதாகும். உடம்பு முழுவதும் இருந்தாலும் ஒருவனுக்குத் தீவினைப் பயனால் ஒரு கை குறை யாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்கள் இரு கையாலும் செய்யும் காரியங்களை அவன் செய்ய முடியாது. ஒருவனுக்குக் கண் இல்லை என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்கள் கண் படைத்ததனால் உலகிலுள்ள பொருள்களின் வடிவம், நிறம், அழகான காட்சி ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து இன்புறுகிறார்கள்; அவனால் அந்த அநுபவத்தைப் பெற இயலாது. உடம்பு முழுவதும் இருந்தாலும் கை இல்லாதவனுக்குக் கையினால் வாழ்கின்ற வாழ்வு இல்லை. பிற உறுப்புக்கள் இருப்பினும் கண் இல்லாதவனுக்குக் கண்ணினால் வாழ்கின்ற வாழ்வு இல்லை. கந்தப் பெருமானுக்குத் திவ்யமான அலங்காரம் செய்திருக்கிறார்கள் என்றால், காதாலே அந்தச் செய்தியைக் கேட்கலாமே யொழிய, கண்ணாலே கண்டு இன்புற முடியாது. ஐந்து பொறிகளையும் குறைவறப் பெற்ற ஒருவன் ஐந்து பங்கு வாழ்கிறான் என்றால் கண் என்ற ஒரு பொறி இல்லாதவன் நான்கு பங்குதான் வாழமுடியும். உயிரும் உடம்பும் ஒன்றி இருந் தால் மட்டும் வாழ்வதற்குப் போதுவதில்லை என்ற உண்மையை இவற்றால் உணர்கிறோம். 'உறுப்புக் குறைவாக இருந்தால்தான் நன்றாக வாழ முடியாது; உறுப்புக்கள் எல்லாம் நன்றாக உள்ளவன் நன்றாக வாழ்கிறான் என்று சொல்லிவிட முடியுமா?" என்பது அடுத்த கேள்வி. அதையும் சற்றே ஆராயலாம். எல்லா உறுப்புக்களையும் கொண்டவன் வாழவும் வாழலாம்; தாழவும் தாழலாம். நல்ல மணம் வீசுகிற ஒர் இடத்திற்குப் போகிறவன், 'ஆ எவ்வளவு இன்பமான மணமாக இருக்கிறது!" என்று நறுமணத்தை நுகர்ந்து அநுபவிக்கிறான். ஆனால் அவனது மூக்கே துர்நாற்றம் ஒன்றை நுகர்ந்தால், "சீ என்ன நாற்றம்! மூக்கை அறுத்து எறி' என்று சொல்வதைக் கேட்கிறோம். மிதிக்கத் தகாத ஒன்றை மிதித்துவிட்டால், "ஐயோ காலை வெட்டி எறிய வேண்டும்" என்று சொல்லி அருவருப் படைகிறான். 233