பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் வாழ்க்கைத் துணை வள்ளுவர், மனைவியின் இலக்கணத்தை ஓர் அதிகாரத்தில் சொல்கிறார். பத்துப் பாட்டுக்களால் மனைவி இன்ன இன்ன குணங்கள் நிரம்பியவளாக இருக்க வேண்டுமென வரையறுக் கிறார். அந்த அதிகாரத்துக்கு ஒரு தலைப்பு இட்டார். சுருங்கிய குறள்களில் ஆழமும் விரிவுமுள்ள கருத்துக்களை விளக்குகின்ற வள்ளுவர் அந்த அதிகாரத்துக்கு மனைவி என்று தலைப்புக் கொடுக்க லாம்; அல்லது காதலி என்று கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. மனைவி என்பவள் கணவனுக்குத் துணையாக அறத்தின் வழியே நின்று அறத்தை வளர்ப்பவள் என்பதை அறிவுறுத்த நல்ல தமிழ்த் தொடரை அமைத்திருக்கிறார். மனிதன் வாழ வேண்டும். நன்றாக வாழ வேண்டும். நன்றாக வாழ்வதற்கு மூல காரணமாய் இருக்கிற பொருள் அறம். அறம் இல்லாவிட்டால் நன்றாக வாழ முடியாது. அறம் செய்ய வேண்டுமானால் துணை வேண்டும். நலமான வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் மனைவி. ஆதலால், அந்த அதிகாரத்துக்கு "வாழ்க்கைத்துணை நலம்' என்று பெயர் கொடுத்திருக்கிறார். அந்தத் தலைப்பிலிருந்தே மனைவியின் இலக்கணம் ஒரளவு புலப்படுகிறது. மனிதனுக்கு உடம்பு, மனம் ஆகியவை இருப்பதே நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக. நல்ல முறையில் வாழ் வதாவது அறநெறியில் வாழ்வது. அற நெறியில் வாழவேண்டு மானால் தனி மனிதனால் முடியாது. துணை தேடிக்கொள்ள வேண்டும். அந்தத் துணைதான் மனையாட்டி. வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் அவள். அவளுடைய நலத்தைச் சொல்லும் அதிகாரம் அது என்று புலனாகிறது. தர்ம பத்தினி என்ற வடமொழித் தொடருக்கும் வாழ்க்கையில் செய்ய வேண்டிய தர்மத்திற்குத் துணையாக இருக்கின்றவள் என்பதே பொருள். அப்படித் துணையாக இருக்கிறவளுடன் நடத்தும் இல்வாழ்க்கை அறம் பொருள் இன்பம் ஆகியவற்றைத் தந்து வீடாகிய பேற்றைப் பெறவும் காரணமாகும். 3O5