பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 உலகமாகிய மேடையில் உயிர்களாகிய பொம்மைகள் ஆடுகின்றன. இவற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள பாசமாகிற கயிற்றைப் பிடித்து ஆட்டி வைப்பவர்கள் திரைக்கு மறைவில் இருக்கிறார்கள். பல பல வேஷங்களைப் போட்டுக் கொண்டு உலகமாகிற மேடையில் வந்து ஆடுகின்றது உயிர். இந்தப் பாச வாழ்க்கையில் ஐந்து பேர்கள் கூத்தாடுகிறார்கள். இவர்கள் திரைக்கு மறைவில் கூத்தாடினால்தான் திரைக்கு முன்னே இருக்கிற உயிர்கள் கூத்தாடும். ஐம்பொறிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் ஆடுகின்ற படியெல்லாம் ஆடிக்கொண்டே, சுற்றிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே வருகிறது என்ன? மீண்டும் மீண்டும் பிறவிதான் வருகிறது. ஐந்து இந்திரியங்களுக்கும் கட்டுப்பட்டே மனிதன் வாழ்கிறான். எத்தனை தூரம் அவை அவனை ஆட்டி வைக்கின்றனவோ அத்தனை தூரம் அவன் ஆடுகிறான். அவற்றைத் திருப்திப் படுத்துவதற்கான காரியங்களையே செய்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் பிறந்து இந்த உடம்பையும், உடம்பில் ஐந்து இந்திரியங்களையும் பெற்றிருப்பது இந்த உலகிலுள்ள பொருள் களைத் தன் சக்தி கொண்ட மட்டும் அநுபவித்து இன்புறுவதற் காகவே என்று நினைக்கிறான். அதனாலே மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கிறது. பிறவி வளர வளரத் துன்பமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஐந்து இந்திரியங் களுக்கு உட்பட்டு அவை சுற்றுகின்றபடி எல்லாம் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும் நெஞ்சு உடையவர்களுக்குப் பிறவி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. "இந்த உலகமாகிய பாச வாழ்க்கையில் கூத்தாடுகின்ற ஐந்து பேர்கள் என் நெஞ்சை ஆட்டுகிறார்கள். அவர்கள் சுற்றுகின்ற சுற்றுக்கு ஏற்ப என் நெஞ்சு சுழன்று கொண்டே இருக்கிறது. ஒரு நிமிஷங்கூட நிற்பது இல்லை. உன்னை நினைக்கலாம் என்றால் மனம் அமைதியாக நின்றால் அல்லவா நினைக்க முடியும்? எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிற என் நெஞ்சில் உன் நினைவு ஒரு கணம் வந்தாலும் சிதறுண்டு போகிறது. இதற்குக் காரணமாய் இருப்பது என்ன? ஐந்து இந்திரியங்களின் ஆட்டம். 22