பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 சுற்றிலும் வீட்டுக்காரன் கட்டியுள்ள மாடுகள் அசுத்தம் செய் கின்றன. ஒரே கொசு எந்தக் கணம் அவ்வீட்டைக் காலி பண்ணிவிட்டுப் போவோம் என்று அவனும் ஆறுமாதமாகத் துடிக்கிறான். ஆனாலும் இன்னும் காலி பண்ணவில்லை. காலி பண்ணிவிட்டு எங்கே போவான்? நடுவீதியிலா சட்டி பானையை வைத்துக் கொண்டு நிற்பான்? அவன் தனக்கென்று ஒரு வீட்டைச் சொந்தமாகக் கட்டிக் கொண்டுவிட்டால், அதற்கப்புறம் ஒரு விநாடி அந்த வீட்டில் வசிப்பானா? வீட்டுக்காரன் காலி பண்ண வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கமாட்டான். அதைப்போல இப்பொழுது நாம் வசிக்கும் உடம்பாகிய வீடு துன்பத்தை அளிப்பது, இது ஒட்டைக் குடிசை என்று நமக்குத் தெரிந்தால் போதாது. இந்த ஒட்டைக் குடிசையை விட்டு வெளியேற வேண்டுமானால், இத்தகைய துன்பங்கள் இல்லாமல் பாதுகாப்புடன் வாழ்கின்ற நல்ல வீடு எங்கே இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அது நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டாக வேண்டும். வீடு என்ற சொல் விடு என்பதிலிருந்து வந்தது. விடுதல் என்பதற்குத் தங்குதல் என்று பொருள். இந்த உடம்பு உயிர் தங்குகிற வீடு; குடி. நாம் வாழ்கிற இந்தக் குடில் நமக்குச் சொந்தம் அன்று. குடியிருக்கிற வீடுதான். இதை எந்தக் கணத்திலும் விட்டு விடலாம்; என்றைக்கு நமக்கென்று ஒரு சொந்த வீடு கிடைக்கிறதோ அன்றைக்கு விட்டு விடலாம். அந்த வீடு கிடைப்பது உறுதி என்று தெரிந்து விட்டால் இந்த வீட்டைக் காலி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் என்று அறிவித்துவிடலாம். நல்ல வீடு கட்டிக் கொண்டவன் வாடகை வீட்டில் ஒரு கணம்கூட இருக்க மனம் ஒப்பமாட்டான். உயிர் உறைவதற்குப் பேரின்ப மயமான முத்தியென்னும் வீட்டைப் பெறும் உரிமையை உடையவர்கள் இந்த உடம்பாகிய பொக்கக் குடிலில் ஒரு நாழிகை கூடத் தங்க மனம் ஒப்பமாட்டார்கள். இறைவன் திருவருளால் என்றைக்கும் நிச்சயமாக இன்பத்தைத் தருகின்ற வீடு கிடைக்கு மென்ற உறுதிப்பாடு உடையவர்களுக்கு இந்த உடம்பில் வாழ் கின்ற ஒவ்வொரு கணமும் முள்மேல் இருப்பது போல் இருக்கும். மறுபடியும் இந்த உடம்பைப் பெறாமல் என்றும் மாறாத வீட்டில் வாழும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அருணகிரி நாதர் இந்த இரண்டு வீடுகளையும் பற்றிப் பாடுகிறார். 346