பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் இத்தகைய வாழ்க்கையை ஞானிகள் வெறுத்தார்கள். துன்பத்திற்கு மூலகாரணமாக இருக்கும் பிறவியையே வெறுத்து ஒதுக்கினார்கள். "புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். சென்ற பிறவிகளை நாம் பார்க்க முடியாது. வரும் பிறவி என்ன என்றும் உணர முடியாது. ஆயினும் இப்போது உள்ள பிறவியைப் பார்க்கலாம். எப்போதாவது இந்தப் பிறவியில் நமக்கு நிறைவு உண்டாகிறதா? நன்றாகப் படிக்க வேண்டுமே என்று வேதனைப்படுகிறோம். படித்துவிட்டாலோ வேலை கிடைக்கவில்லையே என்ற குறை. வேலை கிடைத்து விட்டால் காயம் ஆகவில்லையே என்ற குறை. காயம் ஆகிவிட்டால் சம்பளம் உயரவில்லை என்ற குறை. இப்படி நாளுக்கு நாள் நம் ஆசைகளும், குறைகளும் வளர்ந்துகொண்டு போகின்றனவே ஒழிய நிறைவு எப்போதும் உண்டாவதில்லை. எப்போதும் அல்லலுறுவதாகவே உணர்கிறோம். உணர்ந்தும் உடம்பைவிட்டு விட முடிகிறதா? விட்டுவிட்டால் நமக்கு என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சம் முந்துகிறது. "இனி நமக்குக் கிடைக்கின்ற வீடு நல்லது; துன்பம் இல்லாதது' என உணர்ந்துவிட்ட ஞானிகள் இந்த உடம்பை விடுவதற்குப் பயப்பட மாட்டார்கள். மரணத்துக்கு அஞ்சாதவர்கள் உடம்பைப் பெற்றதன் பயனாக எம்பெருமான் திருவருளுக்குப் பாத்திரம் ஆகும் நெறியில் சென்று, அவன் அருளால் நிச்சயமாக இன்ப துன்பம் இல்லாத நிரதிசய ஆனந்தமயமான அவனது கழலாகிய வீடு கிடைக்கும் என்ற உறுதி உடையவர்கள், உடம்பை விட்டு உயிரைப் பிரித்து எடுத்துச் செல்கிற கூற்றுவனுக்குப் பயப் படாமல் மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்று சொல் வார்கள்; 349