பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து கை தட்டும் சத்தத்தைக் கேட்டவுடனே ஓடிவிடும். உலகத்திற்குத் துன்பத்தைத் தரக் கூடிய பூச்சி புழுக்களாகிய அசுரக் கூட்டங்கள், தன்னுடைய வருகையை உணர்ந்து கொண்டு ஓடிவிடமாட்டாவா என்ற கருணையினால் முருகப் பெருமான் தன் சின்னஞ் சிறு கைகளைச் சேர்த்துத் தட்டினான். கையைத் தட்டின மாத்திரத்தில் குன்றுகள் எல்லாம் குலுங்கின. அஷ்ட திக்குப் பர்வதங்கள் பாதியாய்ப் பிளந்தன. சூரனுக்கு அந்தச் சத்தம்கூடவா கேட்கவில்லை? கை தட்டிய சத்தம் கேட்கா விட்டாலும், குன்றுகள் பாதி பாதியாய்ப் பிளந்து விழுந்ததுகூடா கண்ணில் படவில்லை? முருகன் தன் தாய் தந்தையர்களை மாத்திரம் மகிழ்ச்சி யடையச் செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தால், அவர்கள் காதில் மட்டும் விழும்படி சப்பாணி கொட்டியிருப்பான். தேவர் கள் மகிழ வேண்டும், தன்னுடைய அவதாரத்தின் காரணத்தைப் பகைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிச் சண்முகப் பெருமான் தன் ஆறிரண்டு கைகளால் சப்பாணி கொட்டுகிறான். அதனால் விளைந்தவற்றைப் பார்க்கலாம். இரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ மேருங் குலுங்கவிண் ணாரும்உய்யச் சப்பாணி கொட்டிய கைஆ நிரண்டுடைச் சண்முகனே. உலகத்திற்கு நடுவாய் இருப்பவன் ஆண்டவன். எட்டுத் திசை களுக்கும் நடுவான இடத்தில் அவன் இருக்கிறான். அவன் இருக் கிற இடத்தில் இருந்து கையைத் தட்டினால் எந்தத் திசையில் எங்கே நின்றாலும் கேட்கும். எட்டுத் திசைகளுக்கும் அடையாள மாக அவற்றின் எல்லையில் எட்டுக் குலாசலங்கள் இருக்கின்றன என்பர் புராணக்காரர்கள். சூரன் எங்கே இருந்தாலும் இந்தச் சத்தம் கேட்கும். தேவர்களுக்கும் கேட்கும். வருந்துகின்ற அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். இந்த ஓசை எட்டுத் திக்குகளின் எல்லையிலுமுள்ள மலை களைத் தாக்குகிறது. 25