பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கெளசிக மன்னனுக்குச் சிரிப்பு வந்தது. காட்டில் வாழும் முனிவர், தம்முடைய உணவுக்கே வழியில்லாமல் காய் கிழங்கு களைத் தின்று கொண்டு வாழ்பவர், நமக்கும் நம் பரிவாரங் களுக்கும் விருந்து வைப்பதா? இது என்ன ஆச்சரியம்? என்று எண்ணினவனாய், 'அப்படியே தங்கள் விருந்தை நாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வோம்' என்று சொன்னான். சாப்பாட்டு நேரம் வந்தது. "இலை போடலாமா?’ என்று கேட்டார் வசிஷ்டர். 'போடுங்கள்' என்று இசைந்தான் கெளசிகன். அடுத்த கணம் வசிஷ்டர் தேவலோகத்துப் பசுவாகிய காம தேனுவை ஏவினார். அது வந்தது. அத்தனை பேர்களுக்கும் இலை போட்டார்கள்; அறுசுவை உண்டி பரிமாறினார்கள். அத்தனை பேர்களுக்கும் உணவு கிடைத்தது கிடக்கட்டும். இத்தகைய விருந்தை இத்தனை நாள் வரையில் கெளசிக அரசன் உண்டதே இல்லை. விருந்து நுகரும்போதே அவன் மனத்தில் கெட்ட எண்ணம் தோன்றியது. அவன் கூத்திரியன்; தன்னுடைய படை வீரத்தினால் பகைவர்களின் நாட்டைப் பற்றும் ஆசை ஊறிய உள்ளம் உடையவன். இந்தக் காமதேனுவை நாம் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன? நமக்கு வேண்டிய செல்வம் எல்லாம் இதனால் கிடைக்குமே! இந்த முனிவரிடம் கேட்போம். கொடுக்க மறுத்தால் இருக்கவே இருக்கின்றன, நம் படைகள். இவரை அடக்கிவிட்டு இதைப் பிடித்துக் கொண்டு போய்விடுவோம்' என்று எண்ணினான். விசிஷ்டரிடம் போய், 'சுவாமி, நீர் அளித்த விருந்துக்கு நன்றி, அந்தப் பசு உமக்கு எதற்கு? எனக்கு வேண்டும்' என்று கேட்டான். வசிஷ்டர் அதை எப்படி அனுப்புவார்? “அரசே உனக்கு ஏற்பட்ட ஆசை தகாது. இருந்தாலும் உன்னால் முடியுமானால் அதை ஒட்டிக்கொண்டு போகலாம்' என்று சொல்லிவிட்டார். 'சரிதான். நானே ஒட்டிப் போகிறேன்' என்று சொல்லிக் கெளசிகன் காமதேனுவைப் பிடிக்க நெருங்கினான். அப்போது அது தன் உடம்பைக் குலுக்கிற்று. அந்த ஒரே குலுக்கலில் எண்ணற்ற வீரர்கள் கீழே குதித்துக் கெளசிக மன்னனையும் அவன் படைகளையும் அடித்துத் துரத்திவிட்டார்கள். காமதேனு தேவலோகத்திற்குப் பறந்து போய்விட்டது. 358