பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஞான சக்தி மிட்டாய்க் கடைக்குத் தந்தையார் குழந்தையை அழைத்துக் கொண்டு போகிறார். அங்கே பல பல உருவங்களிலே மிட்டாய்கள் இருக்கின்றன. அவை யாவும் சர்க்கரையினால் ஆனவைகளே. அவற்றைப் பிட்டு வாயில் போட்டால் சர்க்கரையின் சுவைதான் கிடைக்கும். ஆனால் பார்வைக்குக் குதிரையாக இருக்கிறது; கூஜாவாக இருக்கிறது. அதைப் போலப் பல பல உருவத்திலே ஞானம் முருகனிடம் இருக்கிறது. எம்பெருமான் திருக்கரத்தில் அது வேலாக விளங்குகின்றது. அறியாமையைப் போக்குவது ஞானம். காமம் அறியாமையின் விளைவு; அதைப் போக்குகின்ற ஞானம் வேலின் உருவமாக முருகவேளின் திருக்கரத்தில் படையாக விளங்குகின்றது. அவனுக்கு ஞான சக்திதரன் என்ற நாமம் உண்டு. நம்முடைய முயற்சியும் ஆண்டவனிடத்தில் பக்தியும் அவன் வேலின் நினைவும் இருக்குமானால் அப்போது அந்த முயற்சி பலிக்கும். எத்தகைய மகளிரது கூட்டத்தில் பழகினாலும் காமத் தினால் மயங்கமாட்டார்கள். மகளிர் அனைவரையும் தாயாகப் பார்க்கின்ற உள்ளம் வரும். குழந்தை உள்ளம் உடம்பினால் அந்த மகளிரைவிட வளர்ந்தவர்களாக இருந் தாலும் உள்ளத்தால் அவர்களுடைய குழந்தையாகி அவர்களைத் தாயாகப் பார்க்கின்ற மனோபாவம் வந்துவிடும். குழந்தைப் பெரு மானைக் கும்பிடுகிறவர் உள்ளம் குழந்தையுள்ளமாக மாறிவிடும். குழந்தை பெண்ணைத் தாயாகத்தானே பார்க்கும்? ஞானத்தையே வேலாக உடைய குழந்தைப் பெருமானை வழிபடுகின்ற ஞானி களும் எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்த்தார்கள். ஞானிகளின் இலக்கணம் சொல்ல வந்து, 'நம் மங்கையரைத் தாய்போல் நினைந்து' என்று பட்டினத்தார் சொல்கிறார். நன்மங்கையரிடத்தில் பழகும் போது தாயாகப் பார்ப்பார்கள்; தீய மங்கையர்களிடம் அவர்கள் பழகவே மாட்டார்கள். 364