பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் எல்லாப் பெண்களையும் நாமும் தாயாகப் பார்க்க வேண்டு மானால் நாம் அவர்கள் எல்லோருக்கும் குழந்தை என்ற மனோ பாவம் வரவேண்டும்; நாம் முதலில் குழந்தையாகாமல் அவர்கள் தாயென்ற உணர்ச்சி வருவது அருமை. தம் மனைவி அல்லாத மற்றப் பெண்களை எல்லாம் இந்நாட்டவர், 'அம்மா' என்று அழைப்பது மரபு. அம்மா என்று அழைக்கும் உள்ளத்திலே அவகாமம் தோன்றக் கூடுமா? தோன்றுகிறதே என்றால் நினைக்கின்ற உள்ளத்திலே தெம்பு இல்லை. மனத்திண்மை இல்லாதவர்கள் எம்பெருமான் திருக் கரத்திலுள்ள ஞானவேலை நினைத்துக் கொண்டால் போதும்; மனத்தின் கோழைத்தனத்தைப் போக்கித் தைரியத்தையும் திண்மை யையும் வேல் அளித்துவிடும். வேற் கந்தன் அதை நினைந்துதான் அருணகிரியார், 'வேற் கந்தனே' என்று துணைக்குக் கூவி அழைக்கிறார். "ஞான வேலைப் படையாக உடைய கந்தப் பெருமானே' என்று அழைத்து, 'அப்பா இந்த நாட்டிலே எல்லா இன்ப போகங்களையும் துறந்து பல காலமாக உன் துணையின்றி வேறு எத்தனையோ விதமான புறப்படைகளைப் பூண்டு தவம் செய்யத் துணிந்த துறவிகள் இருக்கிறார்களே; அவர்களைப்போலவே நானும் எல்லாவற்றையும் துறந்து வந்துவிட்டேன். இருந்தாலும், துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்து நான் தவிக்கின்றேனே! நீ உன் கை வேற்படையோடு துணையாக வந்துவிட்டால் எனக்கு இளைப்பு வருமா? வராதே இளைத்துத் தவிக்கின்ற நிலை போய் விடுமே! எப்போது அப்பா வந்து இரட்சிக்கப் போகிறாய்?" என்ற வேண்டுகோளை விடுக்கிறார். . முருகன் அவரைப் பார்த்துக் கேட்கிறான்: "என்னைத் துணைக்கு அழைக்கிறாயே, என் கையிலுள்ள வேற் படையைத் துணைக்கு அழைக்கிறாயே! என்னைப் பற்றியும், என் வேலைப் பற்றியும் உனக்கு ஏதாவது தெரியுமா?’ என்று வினாவுகிறான். 365