பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து மயிலின் தோகை பட்டு வீசிய காற்றில் மேரு அசைந்தது என்றும், அது நடையிட எட்டுப் பர்வதங்களும் தூள் தூளாகப் போயின என்றும் சொன்னார். அடுத்த பாட்டில் எம்பெருமானது கொடியில் உள்ள சேவல் சிறகை அடித்துக் கொள்ள மாமேரு வெற்பும் இடைப்பட்ட குன்றமும் இடிபட்டன என்றார். அதற்கப் பால் முருகப் பெருமானின் இடையில் கட்டிய கிண்கிணியின் ஒசையினால் எட்டுவெற்பும் கனகப் பருவரைக் குன்றமும் அதிர்ந் தன என்றார். மயில், கோழி இரண்டும் முருகப் பெருமானது சம்பந்தம் உடையன என்றாலும் அவன் திருமேனியுடனேயே ஒட்டியிருப்பது, அவன் இடையில் கட்டியுள்ள கிண்கிணி. அதை விட அவனது திருமேனியின் உறுப்பாகவே இருப்பது கை. எதையும் செய்வது கைதான். கை செயலுக்கு அறிகுறி. முருகன் கைகளே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்பவை. தன்னுடைய சக்தியை முதலில் மயிலை விட்டுக் காட்டினான்; கோழியை விட்டுக் காட்டினான்; இடையிலுள்ள மணியை விட்டுக் காட்டினான். இப்பொழுது தன் கைகளைத் தட்டினான். அசுரர்களுக்குப் பயம் உண்டாயிற்று; தேவர்களுக்கு அபயம் அளித்தன. அவன் கையைத் தட்டியவுடனே மேருவானது குலுங்கியது. எல்லைகளாக உள்ள மலைகள் தகர்ந்து, இரண்டாகப் பிளந்து விழுந்தன. எல்லைகளைக் காப்பாற்றுபவன் அல்லவா இறைவன்? உலகத்தைக் காப்பாற்ற வேண்டியவன் உலகுக்கே அச்சாக உள்ள மேருவைக் குலுக்கலாமா என்பது ஒரு கேள்வி. ஆனால் அந்த எட்டு மலைகளும் இதுவரையில் எந்த ராஜ்யத்திற்கு எல்லையாக இருந்தன? சூரபன்மனது இருள் அரசுக்கு எல்லைக் கல்லாக இருந்தன. மேரு அவன் ராஜ்யத்திற்கு அச்சாக இருந்தது. அதனால் சூரபன்மனது மாயா வாசனை ஏறியிராதா? படலம் படலமாக அவனால் ஏற்பட்ட அழுக்கு அவற்றின்மேல் ஏறி நிற்கின்றது. அவை உதிர வேண்டுமென்றால் அவற்றை உலுக்கித்தானே ஆக வேண்டும்? வைரம் உயர்ந்ததுதான். நல்லவர்கள் கையில் கிடைத் தால் அது மிகச் சிறந்து உயர்ந்த ஆபரணமாகியது. கெட்டவர்கள் கையில் சேர்ந்தால் அது நஞ்சாகத்தானே மாறுகிறது. மேரு உயர்ந்ததுதான். ஆனால் அது சூரனுடைய சம்பந்தத்தால் அழுக் கடைந்திருந்தது. அந்த அழுக்குப் போகவேண்டுமென்றால் குலுக்கத்தானே வேண்டும்? 29