பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் பலவகை உபதேசம் கந்தர் அலங்காரப் பாடல்கள் யாவும் ஒரே வகையில் அமைந்தவை அல்ல. அருணகிரியார் தம்முடைய அநுபவ நிலையி லிருந்து சொல்லும் பாடல்கள் பல. உலகினருக்குப் பயன்படும் உபதேசங்களாக உள்ளவை பல. அப்படிச் செய்யும் உபதேசங்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அதற்கு ஏற்ற நிலையில் இருப்பவர் கள் மாத்திரம் பயன் அடைவார்கள். மிக உயர்ந்த பக்குவிகளும் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும் அபக்குவிகளும் உலகில் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு உபதேசங்களை அருணகிரியார் அருளியிருக்கிறார். மிக நன்றாகப் படித்த ஒருவர் மிக உயர்ந்த நிலையில் பேசி னால் பலருக்கு விளங்காது. எல்லோருக்கும் புரிய வேண்டுமென் பதற்காகக் கொஞ்சம் எளிய நடையில் பேசினாலோ, 'இது என்ன சந்தைக் கடையா?" என்று படித்தவர்கள் சொல்வார்கள். எல்லாவகையிலும் பேசினால் யார் யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பயன்படும் வகையில் தெளிவாகப் பேசக் கூடியவர் சகலகலா வல்லுநராக இருக்க வேண்டும். தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய்கிற வர்களே சிறந்த ஆசாரியர்கள். அவர்கள் உயர்ந்த அநுபவ நிலை யிலிருந்தே பேசினால் பலருக்கு விளங்காது. தாழ்ந்த நிலைக்கு இறங்கி வந்து மாத்திரம் பேசினால் உலகத்தோர் மதிக்க மாட்டார்கள்; இவரும் நம்நிலையில்தானே இருக்கிறார்?' என்று எண்ணிவிடுவார்கள். அதனால் உலகியல் வாழ்க்கையில் தொடர் புடைய மக்கள் தங்கள் தங்கள் மனப் பக்குவத்திற்கு ஏற்பப் பயன் அடையக் கூடிய பல வழியில் அருணகிரியார் உபதேசம்செய்கிறார்.