பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாளும் கோளும்

தியானம் பண்ணிப் பழகினால் கண்ணாலே காணாத காலத்தும் அக்கோலத்தோடு நினைவில் வந்து நிற்பான்; கனவிலும் வந்து நிற்பான். அவன் திருவுருவத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைக்கும். பழகப் பழக நெஞ்சிலே தோன்றும் உருவமே கண் முன்னாலும் தோன்றும். அந்தத் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். காதல் மிகுந்தவர் களுக்குத் தம்முடைய காதலுக்கு உரியவர்களை உருவெளியாகக் காணுகின்ற நிலை வரும் என்று இலக்கியங்களில் காண்கிறோம். இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.

உருவெளித் தோற்றம்

சூர்ப்பனகை இராமனைக் கண்டு ஆசை கொள்கிறாள். அவனை அணுகியபோது லட்சுமணனால் ஒறுக்கப்பெற்றுத் திரும்புகிறாள். இராவணனிடம் வந்து தன் மூக்கை இழந்ததற்குக் காரணம் கூறுகிறாள். பேரழகியாகிய சீதையைத் தூக்கிக் கொண்டு வந்து இராவணனுக்கு இன்பம் தரும் பொருளாக ஆக்க முயன்றதாகவும், அப்போது லட்சுமணன் தன்னை இந்தக் கோலம் செய்ததாகவும் கூறுகிறாள். சீதையைச் சூர்ப்பனகை பலபடியாக வருணிக்கக் கேட்ட இராவணனுக்கு அப்பெருமாட்டியிடம் ஆசை உண்டாகிறது. அவளுடைய உருவத்தை அவன் கற்பனை செய்து கொள்கிறான். காம மிகுதியால் அவன் மிகவும் துன்பப்படுகிறான். அப்போது அவனுக்கு உருவெளித் தோற்றமாக ஒரு பெண்ணின் உருவம் தோன்றுகிறது. சீதையை அவன் முன்பு பார்த்தது இல்லை. ஆனாலும் முன்னால் தோற்றுகின்ற பெண்ணின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அதை அவன் கண்டபோது அவள்தான் சீதையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உடனே சூர்ப்பனகையை அழைத்துவரச் சொல்கிறான். சீதை சீதை என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தமையினால் அவனுக்குப் பார்க்கும் இடம் எங்கும் சீதையாகத் தோன்றும் நிலை வந்து விட்டது. இராவணன் ஏவலின்படி சூர்ப்பனகை அங்கே வந்தாள். அவளோ இராமனிடத்தில் தீரா விருப்பம் கொண்டவள். அவள் இராவணனை அணுகியபோது, "இதோ பார் இவள்தானா நீ சொன்ன சீதை' என்று அவன் கேட்கிறான்.

113