பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து வேலை-கடல். வெற்பு-மலை. மாமயிலை வாகனமாக உடைய எம்பெருமானது வேல் பட்டதனாலே, சமுத்திரமும் சூரனும், மலையும் அழிந்தனவாம். திருச்செந்தூரில் உள்ள வயல்களில் வளரும் சேல் மீன்களின் விளையாட்டினால் பொழில்கள் அழிந்தன என்று சொன்னார். அந்த அழிவினாலே உண்டானது ஆக்கம். வயலுக்கு நிழல் தந்து வந்த பொழில் அழிந்ததனால் வயல் செழித்து வளர்ந்தது என அறிந்தோம். அடுத்தபடி ஆண்டவனுக்குச் சூட்டுகின்ற கடம்ப மலர் மாலைகளின் மீது ஆசைப்பட்டுப் பூங்கொடியார்களின் மனம் அழிந்தது என்றார். இந்த அழிவினால் உண்மையில் உண்டான ஆக்கம் இன்பந்தான்; மனமற்ற தூய பரிசுத்த நிலையாகிய முத்தி இன்பம் விளைந்தது. கந்தப் பெருமானின் வேல் பட்டு அழிந்தது வேலையும், சூர னும், வெற்பும் என்பதனாலே விளைந்தது என்ன? உண்மையில் சூரன் அழிந்தானா? சூரனின் சூரத்துவம் அழிந்தது; அசுரத்துவம் அழிந்தது. அவன் இப்போது எப்படி இருக்கிறான்? எம்பெருமானின் வாகனமாக அல்லவா இருக்கிறான்? பல பல அடியார்களுக்கு அருள் செய்ய முந்துகின்ற முருகப் பெருமானை, "இதோ நான் தூக்கிப் போகிறேன்' என்று காத்துக் கொண்டல்லவா இருக் கிறான்? எம்பெருமான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அது அழிவு போலத் தோற்றலாம். ஆனால் அவனது அசுரத்துவத்தை அழித்து, அவனுக்கு உண்மையான அநுகூலம் பண்ணினான். அசுரத்துவம் அழிவது சுரத்துவம் வளர்வதற்காக அல்லவா? சூரன் மா மயிலானான். அதைப் நினைப்பூட்டவே, மாமயிலோன் வேல்பட்டழிந்தது என்றார். முருகன் மறக் கருணையால் சூரனை ஆட்கொண்டான். மயில் மேலே ஆண்டவன் வரும்போது அடியார்களின் உள்ளத்தில் காதல் மிகுகின்றது. 'நாம் எப்படி இருந்தாலும் ஆண்டவன் ஆட்கொள்ளுவான். தனக்குப் பகையாய் இருந்த சூரனையே ஆட்கொண்டு, மயிலாக வைத்திருக்கிறானே. நம்மை ஆட்கொள்ளாது போவ்ானா?” என்கிற நம்பிக்கையை அதிகப் படுத்துகிறது மயில். 161