பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் கவரும் செயலைப் போன்றதுதான். திருவள்ளுவர் அப்படியே சொல்கிறார். 'இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று." மூவாசை நல்ல பகுதியை மறந்து தீயதை விழையும் மாயை நம்மை நன்றாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. மண், பொன், பெண் என்று பழங்காலத்தில் ஆசையை மூன்றாக வகுத்திருக்கிறார்கள். மண் என்றவுடன் நமக்கு நல்ல நினைவுகள் எழ வாய்ப்பு உண்டு. அதனைப் பொறுமைக்கு உவமையாகப் பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்; நாம் உதைத்தாலும் அகழ்ந்தாலும் நிலம் நம்மைத் தாங்குகிறது. நமக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விளைத்துத் தருகிறது. நீரைத் தாங்கி நிற்கிறது. தன் வயிற்றினிடையே தங்கம், இரும்பு, நிலக்கரி முதலிய பல அரும் பொருள்களை வைத்துப் பாதுகாத்து நமக்கு உதவுகிறது. அவரவர்கள் தம் தம் இடத்தில் நேர்மை தவறாமல் வாழலாம். ஆனால் தம் இடம் போதாதென்று கருதிப் பிறர் மண்ணையும் கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள். நாடுபிடிக்கும் ஆசை இந்த விஞ்ஞான யுகத்தில் அதிகமாகியிருக்கிறதேயன்றிக் குறையவில்லை. மண் என்றவுடன் மண்ணாசைதான் நம் நினைவுக்கு வருகிறது. வாள் என்றவுடன் கொலை நினைவுக்கு வருகிறது. வாளால் முள்ளை வெட்டலாம்; புதரை அழிக்கலாம். அவை நினைவுக்கு வருவதில்லை. கொள் வதற்காகவே மனிதன் வாளைப் படைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. அப்படியே ஆசைப்படவும், கிடைக்காவிட்டால் போரிட்டு வெட்டி மடிந்து சாகவுமே ஆண்டவன் மண்ணைப் படைத்திருக்கிறானோ என்ற ஐயம் தோன்றுகிறது. அதுபோலவே பொன் பல நன்மைக்குக் கருவியாக இருந் தாலும் ஆசையை உண்டாக்கித் திருட்டு முதலிய தீய செயல் களை வளர்க்கக் காரணமாகிவிட்டது. பொன் காரணம் என்று சொல்வது முறையன்று. அதைக் காணும் மக்களிற் பெரும்பாலோர் ஆசையென்னும் பேயின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடப்பதால் பொன் என்றவுடனே அதை வஞ்சமாகக் கொள்ள வேண்டும் என்ற நினைப்புத் தோன்றுகிறது. 165