பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் பகுப்பார்கள். இந்த நான்கும் வெவ்வெறாகத் தோன்றினாலும் நான்கிலும் அறம் உண்டு. அறம் இல்லாமல் பொருள் இல்லை; இன்பமும் இல்லை; வீடும் பெற இயலாது. அறத்தின் வழியே பெறும் இன்பம் மனைவியிடம் கிடைக்கிறது. பெண்ணின் இன்பத்தைப் பெற விழைபவன் அவ்வின்பத்தை அற நினை வோடு பெற வேண்டும். அறந்திறம்பிய முறையில் பெறுவது இன்பமாகாது; அது உடலின் தினவைத் தீர்க்கும் செயல். அறத்தோடு இணைந்தது காதல்; அல்லாதது காமம். மனைக்குத் தலைவியாக இருந்து இல்லறமென்னும் ஆட்சியை நடத்துகிறவள் மனைவி. அவள் அறத்தைக் காக்கும் கடமையை உடையவள். அறத்தை வளர்க்கும்பொருட்டே ஒருவன் மனையாட்டியைக் கொள்ள வேண்டும். அதனால் மனைவிக்குத் தர்ம பத்தினி என்ற பெயர் அமைந்தது. காமபத்தினி என்று சொல்லும் வழக்கு இல்லை. வெறும் காமவேட்கையைத் தணிப்பதற்காகப் பயன்படும் மகளிரைக் காமக் கிழத்தியர் என்று சொன்னார்கள். காமக் கிழத்தியருக்கு இல்வாழ்வில் பங்கு இல்லை. அறத்தை வளர்ப்பதற்காக வாழ வேண்டிய மனிதன், அதற்குத் துணையாக கொள்பவள் ஒருத்தி தான். மற்றப் பெண்கள் யாவரும் தாய், தங்கை, மகள் என்ற முறையில் அமைபவர்களே ஆவர். 'அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணல்” என்று ஒரு புலவர் பாடுகிறார். இறைவன் அம்பிகையைத் தன் பாகத்தில் வைத்திருக்கிறான். அப்பிராட்டி அறப்பெருஞ் செல்வி. திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் அம்பிகைக்குத் தர்ம சம்வர்த்தனி என்றும் அறம் வளர்த்தாள் என்றும் திருநாமங்கள் வழங்கும். வீட்டுத் தலைவன் அறம் செய்வதற்காகத்தான் மனையாட்டியைப் பெறுகிறானேயன்றி வெறும் இன்பத்தைப் பெறுவதற்காக மட்டும் அன்று; அறமே தலைமையாக இருக்க வேண்டும். மனித சமுதாயம் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து அறத்தை வளர்க்க வேண்டும். இந்தப் பரம்பரையின் வளர்ச்சியை எண்ணியே இன்பம் அமைந்திருக்கிறது. மரம் வளர்வதற்காக, பரம்பரை பெருகுவதற்காக, விதையை இறைவன் உண்டாக்கியிருக்கிறான். ஆனாலும் அந்த வித்தை இனிய கனியினூடே வைத்திருக்கிறான். க.சொ.111-12 167