பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை வென்றவர் யார்? முத்தி நாதன் மெய்ப்பொருள் நாயனாரைத் தொலைத்து விட வேண்டுமென்று வந்தவன். அவன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். அதுவரையில் பலமுறை போர் செய்து மெய்ப் பொருளாரை வெல்ல முடியாமல் தோல்வியுற்றே வந்தான். இப்போதோ சேனை இல்லாமலே ஒரு வாளைக் கொண்டே தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். ஆகவே, அவன்தான் வெற்றி அடைந்தான் என்று சொல்ல வேண்டும். மெய்ப் பொருளார் உயிர் விடும் நிலையில் இருக்கிறார். அவர் முத்திநாதனுக்கு வெற்றியை வழங்கிவிட்டார். இனி உயிரை வழங்கப் போகிறார். அப்படியிருக்கச் சேக்கிழார் இந்தப் பாட்டில் மெய்ப்பொருள் நாயனார் வென்றார் என்று சொல்லி யிருக்கிறார். அது பொருந்துமா? சேக்கிழார் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. பெரிய புராணத்துக்கு ஆதாரமாகிய திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இப்படியே சொல்கிறார். “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” என்று பாடுகிறார். இதைச் சற்றே ஆராய வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் முத்திநாதனும் சமமான நிலை யிலிருந்து ஒருவரை ஒருவர் எதிர்த்தால் அதைப் போரென்று சொல்லலாம். போரில் வெற்றி தோல்வி உண்டு. இன்னார் வென்றார், இன்னார் தோற்றார் என்று சொல்லலாம். இங்கே மெய்ப்பொருளார் உபதேசம் கேட்கப் பணிந்தார். முத்திநாதன் வாளெடுத்துக் குத்தினான். அவன் செய்தது போரன்று அது கொலை. ஆகவே அவன் வெற்றி பெற்றான் என்று சொல்வது பிழை. அவன் நினைத்த எண்ணம் கைகூடியது என்று வேண்டு மானால் சொல்லலாம். அவனுக்கு வெற்றி இல்லை என்றால், மெய்ப்பொருளாருக்குத் தோல்வியும் இல்லை. ஆனால், சேக்கிழார் மெய்ப்பொருள் நாயனார் வெற்றி பெற்றார் என்றல்லவா சொல்கிறார்? அது எவ்வாறு பொருந்தும்? 179