பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை வீட்டில் காணும் இன்பம் அது இல்லாத இடத்தில் இராது. உயிர் சுதந்தரமாக வாழும் இடமாகிய வீடு; முத்தி. ஐந்து பசுமாடுகளுக்கு மத்தியிலே நிணத்தினால் கட்டப் பட்டுள்ள கொட்டிலில் ஆத்மாவுக்கு என்ன இன்பம் இருக்கும்? இதை ஞானிகள் உணர்ந்து, உடம்பினிடத்தில் அருவருப்புக் கொண்டார்கள். 'ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே ஏற்றுத் திரிந்துவிட் டேன் இறை வாகச்சி ஏகம்பனே' என்று பட்டினத்தடிகளார் பாடினார். உடம்பாகிய கொட்டிலை விட்டு, முத்தியாகிய வீட்டு இன்பத்தைப் பெற வேண்டுமென்று முயன்றார்கள் ஞானிகள். அதற்கு வேண்டிய அருளைச் செய்தான் முருகன் என்கிறார் அருணகிரி நாதர். நிணம்காட்டும் கொட்டிலை விட்டு ஒருவீடுஎய்தி நிற்கநிற்கும் குணம்காட்டி ஆண்ட குருதேசிகன். குருதேசிகன் - குருவுக்கும் குருவாகிய குருபரன். 'எல்லாக் குருக்களுக்கும் குருவாக விளங்கும் பரமேசுவரனுக்கே உபதேசம் செய்த சுவாமிநாதன், உபதேசம் பண்ணினான். மாமிசத்தினால் ஆன இந்த உடம்பாகிய கொட்டிலைவிட்டு, மோட்சமாகிய ஒரு வீட்டைப் பெற்று வாழும் மார்க்கத்தைக் காட்டி ஆண்டு கொண் டான்' என்கிறார். யாரை ஆண்டுகொண்டான் என்று சொல்லா விட்டாலும் தம்மை ஆண்டுகொண்டதையே நினைத்துச் சொல்கிறார். 'நிற்கும் குணம்’ என்பது மனத்தின் நிலை. மனத்தின் வேறு பாடுகளைத்தான் குணம் என்று சொல்லுகிறோம். 'இன்ன வழி யிலே, இன்ன குணத்தோடு நிலைத்து நின்று, மாமிசத் தாலான கொட்டிலை விட்டு, என்றைக்கும் நிரதிசய ஆனந்தமாகிய ஒரு வீட்டைப் பெற்று விளங்குவாயாக' என்று சொல்லி ஆண்டு கொண்டான் முருகன். இறைவன் அருள் இல்லாவிட்டால் சரீர அபிமானம் எளிதிலே விடாது. 189