பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த வீடும் 1 “இறைவனை வணங்காத தலை எனக்கு எங்கே வாய்த்தது? அவன்பால் அன்பு கொண்டு குவியாக் கரங்கள் வந்து எனக்கு எங்கே கூடின?' என்று சொன்னபிறகு அருணகிரியாருக்கு இந்த உடம்பைப் பற்றிய நினைப்பு வந்தது. இது எப்போதும் நிலையாக இருப்பது அன்று; ஆதலின் நிலையான ஒரு புகலிடம் வேண்டும் என்பதைச் சொல்கிறார். மூன்று உடம்புகள் உயிருக்கு மூன்று உடம்புகள் உறைகளைப் போல் இருக் கின்றன. பனியன், ஷர்ட், கோட் என்று மூன்று சட்டைகளைச் சிலர் அணிந்து கொள்வது போன்றது இது. வெளியே தோற்றும் உடம்பு பருவுடல்; தூல சரீரம். அது உயிருக்கு வெளி உறையாக இருப்பது. இதனையன்றிக் காரண சரீரம், சூட்சும சரீரம் ஆகிய இரண்டு உட்சட்டைகள் வேறு இருக்கின்றன. நம் கண்ணுக்குத் தோன்றும் பருவுடல் மரணம் அடைந்தபின் அழிந்து போகிறது. தூல சரீரம் என்ற வெளிச் சட்டையை விட்டு உயிர் அகன்று விடுகிறது. ஆயினும் காரண சரீரம், சூட்சும சரீரம் ஆகிய இரண்டையும் அது விடுவது இல்லை. பிரளய காலத்தில் சூட்சும சரீரமும் போகிறது. அப்போதும் காரண சரீரம் அழிவது இல்லை. உயிர் எப்போதும் உடம்போடே இருக்கும் தன்மை வாய்ந்தது. எல்லாக் காலத்தும் உயிர் ஒரு சரீரத்தோடு இருந்து இன்ப துன்ப அநுபவங்களைப் பெறுகிறது. உயிர் எந்தச் சரீரத்தின் தொடர் பும் இல்லாமல் நேரே அநுபவிக்கின்ற அநுபவம் முத்தி இன்பம் ஒன்றுதான். அது அல்லாத மற்ற இன்ப துன்ப அநுபவங்கள் எவற்றையும் உடலின் வாயிலாகத்தான் உயிர் அநுபவிக்க முடியும்.