பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 யினால் தசை கொண்டு வேய்ந்திருக்கும் இந்த அகம் பிரிந்தால் உயிர் சென்று சேரவேண்டிய இடம் ஒன்றுதான். அதுவே இறைவன் திருத்தாள்' என்கிறார். கிரி துளைத்தோன் தசைகொண்டு வேய்ந்த அகம் பிரிந்தால் வேலால் கிரிதுளைத்தோன் இருதாள் அன்றி வேறு இல்லையே! முருகனுடைய தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் இடம் கைலாசம். அது வெள்ளிமலை. பரமேசுவரன் இருக்கும் வெள்ளி மலையைப் போல நாம் இருந்தால், தன் அப்பா வாசம் செய்கிற இடம் என்று நம்மைக் கண்டு முருகன் ஏமாந்து போவான் என்று எண்ணியவனைப் போலக் கிரெளஞ்சாகரன் வெள்ளிமலை உருவத்தில் இருந்தான். அந்த மலைக்குள் சூரன் ஒளித்திருந்தான். தோற்றத்தினால் வெள்ளியாக இருந்தாலும் அம்மலை அசுர உருவமென்றும் அதனூடே அசுரர் தலைவன் இருக்கிறானென்றும் அறிந்த முருகன் தன் வேலை உருவி அதைத் துளைத்தான். 'உடம்பை விட்டு நீங்குகின்ற உயிருக்கு மீட்டும் உடம்பு வராமல் இருக்க வேண்டுமென்றால் ஆண்டவனுடைய இரு தாள் அன்றி வேறு பாதுகாப்பான இடம் இல்லை. அந்தத் தாளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், உயிராகிய மாணிக்கத்தை இறைவனுடைய தாளிலே சேர்க்கும் வரையில் பாதுகாக்கும் கருவியாக உடம்பை நினைக்காமல், இந்திரிய சுகமே பெரிது என்று வாழ்கிறீர்களே; இதனால் மீட்டும் பிறந்து இன்ப துன்பங்களுக்கு ஆளாகி இப்போது போலவே எப்போதும் அல்லலுற வேண்டுமே பாசத்துக்குக் கட்டுப்பட்டு உடம்பெடுத்துப் பத்தனாக இருக்கிற உயிர், ஆண்டவனுடைய இரு தாளாகிய முத்தி வீட்டைப் பெற்று முத்தன் ஆகவேண்டும்; அதுதான் லட்சிய வாழ்வு' என்ற கருத்தை இந்தப் பாட்டின் வாயிலாக நமக்கு உபதேசம் செய்கிறார் அருணகிரிநாதப் பெருமான். ★ 232