பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு இன்று கிடைக்கும் என்பது மாத்திரம் அல்ல; இப்பொழுதே கிடைக்கும்' என்கிறார். "சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயந்தனை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே." "நீ தீட்சை பெறவில்லையே மந்திரஜபம் பண்ணவில்லையே! தலங்களைத் தரிசிக்கவில்லையே!” என்று சொல்லிப் பயமுறுத்த வில்லை. இறைவனைக் காணவேண்டுமென்ற எண்ணத்தோடு முயற்சியைத் தொடங்கியதே பாராட்டுவதற்குரிய செயல் என்பது அவர் எண்ணம். இறைவனும் அன்பர்களிடத்தில் முயற்சியை எதிர்பார்க்கிறான். முயற்சி வேண்டும் நல்ல முறையில் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை நிற்கும். அவனுடைய அருளைப் பெறவேண்டுமென்று ஞான நாடகத்தைத் தொடங்கி விட்டால் அது நிறைவேறும் வரையில் நில்லாது. வேகமாக ஒடுகின்ற நதியில் ஒன்றைப் போட்டால் இடையில் சிறிது தடை இருந்தாலும் ஆற்றின் வேகத்தால் உந்தப் பட்டு எப்படியும் கடலில் போய்ச் சேர்ந்துவிடும். அப்படியே இறைவனுடைய திருவருளைப் பெறும் முயற்சியைப் பண்ணினால் என்றேனும் ஒருநாள் போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவோம். எப்படியாவது முயற்சியைத் தொடங்கி விட வேண்டும். சிறிய முயற்சியானாலும் முயற்சி செய்கின்றதே என்ற எண்ணத்தால் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டுகின்ற தாய்க்கு உள்ள அருட்பண்பு எம்பெருமானுக்கு இராதா? விளையாட்டை மாற்றுதல் நாம் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறோம். இந்த விளையாட்டுக்குக் கருவியாக உடம்பும் உள்ளமும் உரையும் அமைந்திருக்கின்றன. இந்த விளையாட்டுக்கு இடமாக, விரிந்த 265