பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் அதனால் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படித் தேடியும் தேடொணாத பெருமான் அவன். அவனை நானும் சில காலம் தேடினேன். கடைசியில் என்னுடைய உள்ளத்திற்குள் கண்டு கொண்டேன்' என்கிறார். 'மற்றவர்கள் எல்லாம் வெளியில் தேட நான் அப்படித் தேடும்போது அவனைக் காணவில்லை. பின்பு என்னுடைய நோக்கத்தை உள்முகமாக்கி என் உள்ளே தேடினேன். அவன் எனக்கு மிகவும் நெருக்கமாக என்னைக் காட்டிலும் எனக்கு இனியன் ஆக இருக்கிறான் என்று அப்போது கண்டேன்' என்று நினைக்கும்படியாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. 2 தித்தித்திருக்கும் அமுது அருணகிரிநாத சுவாமிகள் தாம் தேடிக் கண்டு கொண்டதை இந்தப் பாட்டில் சொல்கிறார். "பேரின்பத்தைக் கண்டு கொண் டேன்; இதுவரைக்கும் நான் அநுபவித்து அறியாத பரமானந்த சாகரத்தைக் கண்டு கொண்டேன்' என்று துள்ளிக் குதிக்கிறார். எதைக் கண்டுகொண்டார் என்பதை அடையாளம் காட்டிச் சொல் கிறார். ஆறுமுகம் படைத்த ஒரு பெரிய அமுதை, தித்தித்திருக் கும் அமுதைக் கண்டு இன்புற்றேன் என்று அவர் சொல்கிறார். பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன். அமுதம் எளிதில் விளைவது அன்று என்பது நமக்குத் தெரியும். முப்பத்து முக்கோடி தேவர்களும், பலகோடி அசுரர் களும் சேர்ந்து கடைந்தார்கள். திருமால் மிகவும் உதவி செய்தார். இவ்வளவு பெரிய முயற்சியின் பயனாகவே தேவாமுதம் கிடைத் தது. அது கிடைப்பதற்கு முன்னாலே எத்தனையோ தடைகள் உண்டாயின. பெரிய தடையாக ஆலகால விடம் தோன்றியது. அப்படிக் கடைந்த தேவாமுதமும் மிகச் சிறந்தது என்று சொல்வதற்கு இல்லை. அதனை உண்டவர்கள் நெடுங் காலம் வாழ்கிறார்களே அன்றிச் சிரஞ்சீவியாக இருக்கவில்லை. அது மாத்திரம் அன்று; தமக்கு அமுதம் கிடைத்துவிட்டது என்ற அகங்காரம் வேறு அவர்களுக்கு உண்டாகிவிட்டது. 287