பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 விளக்கும் சோதியும் | ஒரு சிறிய விளக்கை வீட்டில் வைத்திருக்கிறோம். அந்த விளக்கு ஒர் எல்லைக்குள் ஒளியைப் பரப்பிச் சில பொருள்களை விளக்குகிறது. சூரியன் தோன்றினால் எல்லா வீடுகளும் நமக்குத் தெரிகின்றன; கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் நம்முடைய பார்வை விரிகிறது. அப்போதும் நமக்குப் பல பொருள்கள் தெரிவது இல்லை. சுவருக்கு அந்தப் பக்கம் உள்ள பொருள்கள் தெரிவது இல்லை. அந்தப் பேரொளியினால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், அடுத்து நின்ற சுவர்களும், மறைப்புகளும் அப்பாலுள்ளதை நம் கண்ணுக்குப் புலப்படாமல் செய்கின்றன. சிறிய விளக்கின் ஒளியில் எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நெடுந்துரத்திலுள்ள பொருள் தெரிவது இல்லை. பெரிய சோதிப் பிழம்பாகிய கதிரவன் ஒளிக்கு எல்லாப் பொருளையும் விளக்கும் ஆற்றல் இருந்தாலும் தடுத்து நிற்கிற மறைப்புகளினால் நமக்குப் பொருள் புலப் படுவது இல்லை. அப்படியே மனம், உணர்வு ஆகிய தடை இருக்கும்போது இறைவனுடைய பேரருள் நமக்குப் பயன் படுவது இல்லை. சிறிய விளக்கை ஏற்றிப் பின்பு அந்த விளக்கே சோதியானால் நம் பார்வை விரியும். அதோடு அடைபட்ட மறைப்புகள் எல்லாம் அழிந்து ஒழியுமானால் மிக விரிந்த பரப்பில் நம்முடைய பார்வை போகும். சிறிய விளக்கு வைத்து வீட்டிலேயே வளைய வருவது போல நாம் திருக்கோயிலில் எம்பெருமான் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பார்க்கி றோம். அந்தச் சிறிய விளக்கே அநுபவத்தில் எல்லை இல்லாத சோதிப் பிழம்பாகத் தோன்றுகிறது. கண்டத்திற்குள் காணுகின்ற ஆறுமுகநாதனைக் கோயிலில் காண்கிறோம். அகண்ட பரமானந்த வெள்ளத்தில் அகண்டமாக இருக்கிற ஆறுமுக நாதனைக் காணலாம். இப்போது நம்முடைய கண்ணுக்கு இனிமையாக இருக்கிற உருவம் அப்போது நம்முடைய உயிருக்கு இனிமை யாக இருக்கும். இந்த ஆறுமுகமும் பன்னிரண்டு தோளும் உடைய எம் பெருமானுடைய தரிசனத்தில் நாம் உள்ளக் கிளுகிளுப்பு அடைகிறோம். ஆனால் அகண்டக் காட்சியிலே அருணகிரிநாதர் கண்ட ஆறுமுகநாதன் உயிருக்குள்ளே இன்பம் பாய்ச்சினான். 3O2