பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் – 3 பெரியவர்கள் சொல்வார்கள். பிறர் காணாமல் உண்ணுவதும், பிறர் கை படாமல் உண்ணுவதும் தூய்மைக்கு அடையாளம் என்று பழைய காலத்து ஆசார சீலர்கள் கருதினார்கள். இப்போது கண்படாமல் உண்ணுவதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் நம்முடைய கை படாமலேயே சாப்பிடவேண்டுமென்று கரண்டி முதலியவைகளை நாகரிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். உயர்ந்த வகையிலுள்ள வண்டும் பிறருடைய கைக்கு எட்டாதபடி, பிறருடைய கண் படாதபடி, மலையின் உச்சியின்மேல் இருக்கும் மரக் கொம்புகளில் தேனைச் சேகரித்து வைக்கின்றது. அத்தகைய வண்டுக்குத் தும்பி என்று பெயர். தும்பிகளுக்குள் சிறந்த தும்பியைக் கோத்தும்பி என்று சொல்வார்கள். மரத்தின் உயர்ந்த கொம்பில் தேனை வைப்பதால் கோல்தும்பி என்று சொல்வதும் உண்டு. தாமரையில் உள்ள தாதை ஊதி அதிலுள்ள தேனைக் கொண்டுபோய் மலையின் மேல் இருக்கும் சந்தன மரத்தில் அடை வைக்கும் வண்டு ஒன்றைப் பற்றி நற்றிணை என்ற சங்க காலத்து நூல் பேசுகிறது. “தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போல.” இவ்வாறு வண்டுகளில் அழுக்கை உருட்டும் வண்டு, மலரில் உள்ள சிறு தேனைத் தொகுத்துக் கீழே அடை வைக்கும் வண்டு, உயர்ந்த மரத்தில் தேன் கூடு கட்டும் வண்டு, மலையின் மேலே அடை வைக்கும் வண்டு என்று பல வகைகளைப் பார்க் கிறோம். மனிதர்களுடைய மனம் வண்டு போன்றது. வண்டு களில் சில சாதி உண்டு. மனங்களிலோ பலபல சாதி உண்டு. இந்த மனம் அழுக்கை உருட்டும். அழகுப் பொருள்களையும் உருட்டும். எங்கெங்கே தேன் உண்டோ அங்கெல்லாம் நாடிச் சென்று மலர்களைக் கண்டு தேனைத் தொகுப்பதே வண்டினுடைய வாழ்வு. சோமசுந்தரக் கடவுள் பாடியதாக உள்ள ஒரு பாட்டில். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று வருகிறது. கொங்கு - தேன். அழகிய சிறகைப் பெற்ற வண்டு எங்கே தேன் உள்ளது என்று தேடிப் பறந்து திரியும் இயல்பு உடையது. அப்படித் தேடித் தொகுத்த தேனைத் தான் உண்பதோடு அன்றி உலகமே உண்ணும்படி கொடுக்கிறது. இறைவனுக்கும் அபிஷேகம் செய்ய அத்தேன் உதவுகிறது. 312