பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 சேர்த்து நூறு ரூபாயாகச் செய்யலாம் என்று செலவழிக்காமல் வைத்திருப்பான். இப்படியே பணம் படைத்தவனுக்குத் தன்னிடம் இருக்கும் பணம் போதும் என்ற மன நிறைவு இல்லாமல் பின்னும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் உள்ள பணத்திற்கு மேற்பட்ட தொகையை மனத்தில் எண்ணி அதை எட்டவேண்டுமென்று ஆசைப்படுகிறான். தன்னுடைய வாழ் நாள் முழுவதும் அதையே லட்சியமாக வைத்து அதையே சேர்த்துக் கொண்டிருக்கிறான். அரசர் செல்வம் பணம் மிகுதி ஆக ஆக ஒருவனுடைய பலமும் பதவியும் உயர்கின்றன. அவனைப் பல மக்கள் சேர்ந்து வழிபடுகிறார்கள். பழங்காலத்தில் மிகுதியான செல்வத்தை வைத்திருந்தவர்கள் அரசர்கள். மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளிலும் அவர்கள் எல்லோரையும் மிஞ்சி இருந்தார்கள். அதனால்தான், ராஜபோகம் என்று சொல்லும் பழமொழி வந்தது. அரசர்கள் இல்லாத இந்தக் காலத்திலும்கூட, 'அவனுக்கு என்ன பெரிய ராஜா, சுகமாக இருக்கிறான்!” என்று சொல்லும் வழக்கம் மாத்திரம் போகவில்லை. அரசர்கள் காலாலே நடக்கமாட்டார்கள். பணம் படைத்தவர்கள் இப்போதுகூடத் தம் காலை அதிகமாகப் பயன்படுத்துவது இல்லையே! வாகன வசதி செய்து கொள்வது பணத்திற்கு ஒர் அடையாளம். இந்தக் காலத்தில் ஒருவனுடைய செல்வத்தை அவனிடத்திலுள்ள காரினால் அளக்கலாம். பெரிய பணக்காரன் தனக்கு ஒன்று, தன் மனைவிக்கு ஒன்று, தன் பிள்ளைகளுக்கு சில என்று கார் வசதிகளை அதிகமாக்கிக் கொள்கிறான். பழங் காலத்தில் கார் என்ற வாகனம் இல்லாவிட்டாலும் தேர் இருந்தது; யானை இருந்தது; குதிரை இருந்தது. குதிரையில் செல்பவன் சிறிய பணக்காரன். யானையில் செல்கிறவன் பெரிய பணக்காரன். தேரில் செல்கிறவன் எல்லோரையும்விடப் பெரிய பணக்காரன். தேர், யானை, குதிரை என்று மூன்று வாகனங்களை யும் பழங்காலத்தில் சிறந்தனவாகப் போற்றினார்கள். அரசர் களிடம் இந்த வாகனங்கள் இருந்தன. - 333