பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை போதாது என்று கருதி அமராவதியையும் ஆளவேண்டும், இந்திர பதவியையும் தான் பெறவேண்டும் என்று விரும்பினான். அதனால் தேவலோகத்தின் மேல் படையெடுத்து அமராவதியைத் தன் கீழ் அடக்கிக் கொண்டு, இந்திரனையும் அவன் பதவி யிலிருந்து விலக்கி விட்டான். சுரேந்திரனை வென்று தான் அசுர சுரேந்திரனாக வேண்டும் என்று விரும்பினான். அவனிடம் எல்லாவிதமான பொருள்களும் குவிந்திருந்தன. நாம் பணத்தை மலை போலக் குவிக்க வேண்டுமென்று சொல்கிறோம். சிறந்த செல்வர்களைப் பற்றிப் பேசும்போது மலை மலையாய் ரூபாயைக் குவித்து வைத்திருக்கிறார் என்று சொல்வது உண்டு. அப்படி ஒரு செல்வன் எத்தனை சேர்த்துக் கொண்டாலும் சூரனைப் போல யாரும் சேர்த்துக் கொள்ள முடியாது. அவன் ஒரு வெள்ளி மலையையே துணையாக வைத்திருந்தான். அந்த வெள்ளி மலைதான் கிரெளஞ்சாசுரன். சூரனுடைய பதவியும், வெள்ளி மலையும் நல்லவர்களுக்கு மாறாக இருந்தன. அந்த இரண்டினாலும் அசுரலோகம் இன்பத்தை அடைந்தது; தேவ லோகம் துன்பத்தை அடைந்தது. பதவி ஆசையே உருவமாகிய சூரனும், பணத்தாசையே உருவாகிய கிரெளஞ்சனும் ஞானமே உருவமாகிய வேலினால் பொடிப்பட்டுப் போயினர். சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் முருகன். அருணகிரியார் இங்கே கதிர்வேலை எறிந்து பொடி யாக்கி னான் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவன் எறிந்தால் அவை நிச்சயமாக அழியும் என்பது தெளிந்த உண்மை. முருகன் வேலை எறிந்தான் என்றால் வேறு ஏது நிகழ முடியும்? மூன்று வகைப் பக்தி பக்தியில் மூன்று வகை உண்டு. குரு பக்தி, லிங்க பக்தி, சங்கம பக்தி என்று சொல்வார்கள். ஞானாசிரியனை அடுத்துப் பக்தி செய்வது குரு பக்தி. இறைவனிடத்தில் அன்பு செய்வது லிங்க பக்தி அல்லது சிவபக்தி. அடியார்களிடத்தில் அன்பு வைத்து ஒழுகுவது சங்கம பக்தி என்று சொல்வார்கள். சங்கமர்கள் - 357