பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் எமனாக இருக்கிறது. இறைவன் திருவருட் பலத்தைத் துணையாகக் கொண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாதவன், மதி இல்லாதவன், எதைக் கண் டாலும் நடுங்குகிறான்; அஞ்சி அஞ்சிச் சாகிறான். எல்லாவற்றை யும் கிலிபிடித்த தன் மனத்தால் தீங்காகக் கற்பனை செய்து பார்த்துப் பயப்படுகிறான். வீண் அச்சம் எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் தம் வீட்டுத் திண்ணையில் பத்துப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வூர்க் கோயில் யானை அவ்வழியே வந்தது. அவர் வீட்டு வாசலுக்கு எதிரே போகும்போது ஒரு மரத்திலிருந்து தேங்காய் தொப்பென்று கீழே விழுந்தது. அந்தத் தேங்காயின் மேல் யானை தன் காலைத் தூக்கி வைத்தது. அவ்வளவுதான்; தேங்காய் அப்படியே மட்டையோடு நசுங்கிப் போய் விட்டது. அதைப் பார்த்த திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் விம்மி விம்மி அழுதார். 'ஏன் ஐயா இப்படி அழுகிறீர்கள்?' என்று ஒரு மாணவன் கேட்டான். 'இந்த யானையின் காலில் என் தலை அகப்பட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தானே சட்டினி ஆகப் போயிருக்கும்?' என்று சொல்லி விட்டு மேலும் அழுதாராம். அவரோ திண்ணையின்மேல் இருந்தார். யானையோ வீதி வழியே போயிற்று. அவர் தலை யானையின் காலில் எப்படி அகப்படும்? ஆனாலும் யானையின் காலில் தம் தலை அகப் பட்டுக்கொண்டால் என்ன ஆகும் என்பதை அவர் மனத்திலே கற்பனை செய்துகொண்டு, இருக்கிற தொல்லை போதாது என்று விலை கொடுத்து வாங்கின மாதிரி அழுதார். அவரைப் போலவே நெஞ்சில் பலமில்லாத கோழைகள் பலர் இருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் சாகிறார்கள். நல்லவர்களைப் பொல்லாதவர்கள் என்று எண்ணி அவர்களோடு பழகுவது இல்லை. உலகில் ஒருவன் எப்படி நினைக்கிறானோ அப்படி விளைகிறது. 'யத் பாவம் தத்பவதி' என்று வடமொழியில் ஒரு வாக்கியம் உண்டு. 33