பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கண்ணாடியால் வங்த சண்டை சீனா தேசத்தில் ஒருவனுக்கு ஒர் அருமையான கண்ணாடி கிடைத்தது. அத்தேசத்தில் அப்போது கண்ணாடி என்பதே இல்லாத காலம். அவன் அதைப் பார்த்தான். அவன் முகம் தெரிந்தது. தன்னுடைய முகந்தான் அதில் தெரிகிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. 'இதற்குள் ஒரு மனிதன் இருக் கிறானே; இவன்தான் தேவன் போலும்' என்று எண்ணி அந்தக் கண்ணாடியை மிகவும் பத்திரமாகத் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டான். தினந்தோறும் காலையில் எழுந்திருப்பது, மெள்ள அவ்வறைக்குள் தன் மனைவிக்கும் தெரியாமல் நுழைந்து பெட்டியைத் திறந்து கண்ணாடியைப் பார்ப்பது, மனைவி வந்துவிட்டால் பெட்டியை மூடிக்கொண்டு வந்துவிடுவது - இப்படிச் செய்து கொண்டிருந்தான். அவனுடைய செய்கையைக் கண்டு அவன் மனைவிக்கு ஐயம் உண்டாயிற்று. தன் கணவன் பெட்டியில் எதை ஒளித்து வைத்திருக்கிறான், எதற்காக இப்படி ஒளிந்து ஒளிந்து அறைக்குள் போகிறான் என்று அறிய வேண்டு மென்ற அவா அவளுக்கு உண்டாயிற்று. ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாதபோது அவ்வறைக்குள் நுழைந்து பெட்டிக்கு மறு சாவி போட்டுத் திறந்து பார்த்தாள். அதற்குள் பளபள வென்று கண்ணாடி இருந்தது. அது கண்ணாடி என்று அவளுக்கும் தெரியவில்லை. சட்டெனக் குனிந்து பார்த் தாள். அவள் முகம் அதில் தெரிந்து. அவளுக்கு அது தன்னுடைய முகம் என்று உணரக்கூடிய அறிவும் இல்லை. நம் கணவன் யாரோ ஒரு பெண்ணை அல்லவா இங்கே நமக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறான்? என்று எண்ணினாள். அவனிடம் அவளுக்கு எல்லையில்லாக் கோபம் வந்துவிட்டது. "ஒன்று என் சக்களத்தி இந்த வீட்டில் இருக்க வேண்டும்; அல்லது நான் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று முடிவு செய்து விடுகிறேன்" என்று மிக்க ஆங்காரத்தோடு தன் கணவன் வந்ததும் வராதது மாகச் சண்டைக்குப் போய் விட்டாள். அன்றைக்கு அவள் கணவன் தன்னுடன் ஒரு புத்தபிட்சுவை யும் அழைத்து வந்திருந்தான். அவர் மிக்க பொறுமையாக, 'ஏன் அம்மா இப்படி உன் கணவரிடம் கோபிக்கிறாய்? அவர் என்ன தப்புச் செய்தார்? என்னிடம் சொன்னால் நான் விசாரிக்கிறேன்' என்றார். 34