பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 போன என் பெண் தங்களுடைய திருவருளினால் உயிர்பெற்று மீண்டும் எழுந்து விட்டாள். இவளைத் தாங்களே திருமணம் செய்து கொண்டருளவேண்டும்' என்று ஞானசம்பந்தப் பெரு மானுடைய திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். 'நீ பெற்ற பெண் அப்பொழுதே பாம்பு கடித்து இறந்து விட்டாள். இந்தப் பெண்ணை நான் இப்பொழுது பெற்றேன். இவளுக்கு நான் தந்தை அல்லவா? நான் எவ்வாறு இவளை மணம் செய்துகொள்ள முடியும்?' என்று சொன்னார் ஞான சம்பந்தர். அவருக்கு வயசு அப்போது பதினாறு. நல்ல காளைப் பருவம். திருமணம் செய்துகொள்வதற்கு உரிய பருவத்தினர். இந்தக் காலத்தில் இத்தகைய வயசும், புகழும் உடைய எவனாவது நல்ல அழகான பெண்ணைப் பார்த்தால் மணம் வேண்டாம் என்று சொல்வானா? எம்பெருமாட்டியின் திருவருளாலே ஞான கலை பெற்ற பெருமான் அவர். ஆதலால் அழகுப் பிழம்பாய்த் தம் முன் நின்ற பூம்பாவையின் எழில் வண்ணத்தை அவர் காணவில்லை. அவளைக் கண்டபோது காமம் உண்டாகவில்லை. தம் பெண்ணாகக் கண்டார். இதைச் சேக்கிழார் சொல்கிறார். பிரமனும் சம்பந்தரும் இங்கே ஞானசம்பந்தப் பெருமான்பூம்பாவையைப் படைத்தார். எண்ணிலாத ஆண்டுகளாகப் படைப்பதையே தன் தொழிலாகக் கொண்ட முதியவனும் வேதம் உணர்ந்தவனுமாகிய பிரமதேவனும் ஒரு பெண்ணைப் படைத்தான். ஞானசம்பந்தப் பெருமான் பூம் பாவையை உருவாக்கி எழுப்பினார். பிரமதேவன் கலைமகளைப் படைத்தான். படைத்தவுடனே, அவளது எழிலின் வண்ணம் கண் டான். "அழகாக இருக்கிறாளே; இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட வேண்டும்" என்று அவன் எண்ணினான். தன்னுடைய பெண் என்று அவன் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் மணந் திருப்பானா? பார்ப்பதற்கு அவனுக்குக் கண் இல்லையா? எட்டுக் கண்கள் உடையவன்; தன்னுடைய நான்கு முகங்களாலும் பார்த்தான். அவனுக்கு வயசு என்ன கொஞ்சமா? பல்லாயிரம் ஆண்டுகள் சென்ற கிழவன், பிதாமகன். அதோடு வேதம் சொல் கிறவன். உலகமே அவனை வேதா என்று கொண்டாடுகிறது. அவன் என்ன செய்தான்? 46