பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு இருப்பது உண்டு. யாராவது ஒருவர் தர்மத்தைச் செய்தால், 'என்னிடம் பணம் இருந்தால் நானும் அப்படியே கொடுப்பேன்" என்று சிலர் சொல்வது உண்டு. ஆனால் அவர்களிடம் பணம் வரும்போது கொடுக்க மனம் வராது. இது ஒரு வகை மாயை. கொடுக்க வேண்டுமென்ற மனம் உடையவனுக்கு அந்த எண்ணம் அழுத்தமாக இருக்கவேண்டும். அதனால்தான் ஒளவைப்பாட்டி, 'அறம் செய விரும்பு’ என்று சொன்னாள் கொடுப்பதற்கு விருப்பம் அதிகமானால் எப்போது கொடுப்பதற்குரிய பொருள் வரும் என்று எதிர்பார்த்திருப்பான். பசி உடையவன் எப்போது சோறு வந்தாலும் சாப்பிடமாட்டானா? வேளைக்குச் சோறு சாப்பிடுவது என்பது பசி இல்லாதவர்கள் செயல். பசி உடையவனுக்கு வேளை இல்லை; உணவு கிடைத்த அந்தக் கணமே அவன் உண்டான். மிகவும் அலுத்துப்போனவனுக்கு இரவு வந்தால்தான் தூக்கம் வரும் என்பது இல்லை. அலுப்பு முறுகினபோது தூக்கம் வந்துவிடும். அப்படியே உள்ளத்தில் அறம் செய்யவேண்டுமென்ற நினைப்பு உள்ளவன் எப்போது எந்தப் பொருள் கையில் கிடைத் தாலும் அதனைப் பிறருக்கு வழங்க முற்படுவான். அவனுடைய நெஞ்சில் கசிவு ஏற்பட்டுப் பொருளும் வசதியாகக் கிடைக்கு மானால் அதை உள்ளபோதே கொடுத்துவிடுவான். சிலருக்குச் சில சமயங்களில் கொடுக்க வேண்டுமென்ற நினைவு உண்டாகிறது. கொடுப்பதற்குரிய பொருள் வந்தாலோ அந்த நினைவு போய் அந்தப் பொருளின்மீது பற்று உண்டாகிறது. பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நினைவு தோன்றும் போது கொடுத்துவிட வேண்டும். அடுத்த கணமே பத்து ரூபாய் ஐந்து ரூபாயாக ஆகிவிடும். பின்பு மெல்ல மெல்ல, இப்போது அவசியம் இல்லை’ என்ற நினைவு தோன்றும். இது மனித மனத்தின் இயற்கை; எப்போது நெஞ்சில் கொடுக்க வேண்டு மென்ற எண்ணம் தோன்றுகிறதோ அப்போதே கையில் பொருள் இருந்தால் உடனே கொடுத்துவிட வேண்டும். உள்ளபோதே கொடாதவர். என்று அருணகிரிநாதர் சொன்னார். உள்ளபோதே கொடாதவன் பின்பு கொடுக்கமாட்டான். அருணகிரிநாதர் பல பாடல்களில் எதிர்மறை வாயிலாகத் தம்முடைய கருத்தைச் சொல்வது உண்டு. 95