பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் 1 இரண்டு எல்லைகள் மனித வாழ்வுக்கு இரண்டு எல்லைக் கற்கள் இருக்கின்றன. ஒன்று பிறப்பு; மற்றொன்று சாவு. இந்த இரண்டு எல்லைக் கற்களினிடையே மனிதன் வாழ்கிறான். வாழும்போது பலபல செயல்களைச் செய்தாலும் அவனது ஆன்மாவுக்குப் பயன்படு கிறவை சிலவே. பெரும்பாலும் தனது வருங்கால வாழ்வுக்காக, மறுமைக்காக, அவன் ஏதும் செய்வது இல்லை. இந்த வாழ்வே நமக்குச் சரி என்று எண்ணிக் கொண்டு இப்போது அநுபவிக்கும் இன்பமே மேலானது என்ற மயக்கத்தில் வாழ்கிறான். 'செத்த பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது நல்ல வாழ்வாக அமைய வேண்டும். மீண்டும் மீண்டும் இறந்து பிறக்காத நிலை பெற வேண்டும்’ என்ற நினைவு இருந்தால்தான் அதற்கு ஏற்ற முயற்சியைச் செய்வான். இறைவன் திருவருள் கிடைத்தால் அத்தகைய ஆராய்ச்சியில் தலைப்படுவான். அப்போது பிறரிடத்தில் அன்பு வைத்துத் தன் பொருளை ஈயும் நிலை உண்டாகும். பொருளும் அருளும் பொருளை வைத்திருந்தாலும், ஈவதற்குரிய ஏழைகள் அருகில் இருந்தாலும் எல்லோருமே கொடுக்க முடிவதில்லை. கொடுக்கவேண்டும் என்ற மனம் இருந்தால் கொடுத்துவிடத் தோன்றும். அத்தகைய மனம் இறைவன் திருவருளால் வர வேண்டும். இறைவன் நினைத்தால் அன்றி நம்மால் கொடுக்க வகை கிடையாது. சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கு ஒன்று ஈகைக்கு எனை விதித்தாய் இலையே