பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 சாவிலும் வேறுபாடு இல்லை. ஆனால் அவர்கள் அநுபவத்தில், இப்போது உள்ள வாழ்வில், வேறுபாடு உண்டாவதற்குக் காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த அறந்தான். சிவிகையில் இருக்கிறவன் முன்பு அறம் செய்திருக்கிறான். சுமக்கிறவர்கள் முன்பு அறம் செய்யவில்லை." இத்தகைய கருத்துக்களை அடக்கி அந்தக் குறளைச் சொல்லியிருக்கிறார். முன்னைப் பிறவியில் அறம் செய்தவர்கள் இந்தப் பிறவியில் பொருளாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் திருவருளால் மீண்டும் அறம் செய்ய வேண்டுமென்ற நினைவு உண்டானால், வரும் பிறவிகளுக்கும் அவர்கள் நன்மை செய்து கொண்டவர்களாகிறார்கள். ஈய வைத்தார் இடைக்காலத்தில் நாம் பார்க்கிற செல்வம் மறுபடியும் போய்விடும் என்ற உணர்வோடு, இது நமக்காக வந்தது அன்று. இரப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக இறைவன் தந்தது என்ற நினைவு மெய்யறிவாளிகளுக்குத் தோன்றும். இறைவன் நமக்குச் செல்வம் தந்தது இரப்பவர்க்கு ஈவதற்காகத்தான் என்ற எண்ணம் இருப்பவர்கள், தம்முடைய பொருளைப் பிறருக்குக் கொடுத்து இறைவனது அருளைச் சம்பாதித்துக் கொள்வார்கள். 'இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்’ என்பது அப்பர் சுவாமிகள் பாட்டு. உலகத்திலுள்ள மனிதர் களிடம் பொருளை வைத்துத் தன்னிடம் அருளை வைத்துக் கொண்டிருக்கிறான் ஆண்டவன். அருளும் பொருளும் பிறருக்கு ஈவதனால்தான் சிறப்பு அடைகின்றன. பொருளைப் பெற்றவன் பிறருக்கு ஈந்து அருள் என்னும் செல்வத்தை அடையவேண்டும். பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருணையோடு ஆண்டவன் தன்னிடத்தில் அருளை வைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே பணக்காரனும் பிறருக்குக் கொடுப்பதற்காகவே பணத்தை இறைவன் தனக்குக் கொடுத்திருப்பதாக எண்ண வேண்டும். பிறருக்குப் பொருளைக் கொடுக்கிறவன் இறைவன் வழங்கும் அருளைப் பெறுகிறான். - - i04