பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பிறருக்குத் தர்மத்தை விளக்கிக் காட்டவந்த செல்வர் அல்லவா அவர்? அவர் நினைத்திருந்தால் இருந்த இடத்தில் இருந்த படியே சீதாபிராட்டியை மீட்டுக்கொண்டு வர முடியும். விண் உலகத்தை விட்டு மண் உலகத்திற்கு வந்த பெருமானுக்குக் கடலுக்கு இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போகத் தெரியாதா, தாம் மேற்கொண்ட அவதார தர்மத்திற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே தவிர, வேறு வழியில் நடக்கக் கூடாதென்பது அவர் கருத்து. ஆகவே, மற்ற மக்கள் செய்கிறது போலக் காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் விபீஷணனைக் கேட்கிறார். அதற்கு விபீஷணன் வருணைைனச் சரண் அடைவது ஒன்றே கடலைக் கடக்கும் உபாயம் என்று சொல்கிறான். ராமபிரான், "வருணனையா நான் வேண்டிக் கொள்வது?" என்று சொல்லவில்லை. விபீஷணன் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டு தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதன்மேல் ஏழு நாட்கள் தவம் செய்தார். அந்தப் பெருமான் தவம் செய்த இடந்தான் திருப்புல்லணை என்ற பெயருடன் இருக்கிறது. ராமேசுவரம் போகிறவர்கள் அந்தத் தலத்திற்குப் போவது மரபு. ராமபிரானது பெருமையை வரணன் அப்போது உணர்ந்து கொள்ளவில்லை. தாம் பெற்ற இந்திரச் செல்வம் போன்ற அயோத்திமாநகரத்தையே தம் தம்பிக்குக் கொடுத்துவிட்ட வள்ளல் இவர் உலகம் வேண்டியது அத்தனையையும் வேண்டியபோது கொடுக்கும் பிரான். அத்தகைய கருணைக் கடல் இங்கே உப்புக் கடலின் வாசலுக்கு வந்து நம்மையும் ஒரு பொருளாக மதித்துக் குறையிரப்பவர் போல இப்படித் தவம் புரிகிறாரே! இது நமக்கு வாய்த்த பெருமை அல்லவா? இவருக்கு வேண்டிய உதவியை நாம் உடனே செய்வோம். வலியப் போய்ச் செய்து இவர் அருளைப் பெறலாம் என்று வருணன் எண்ணவில்லை. 'இவர் நம் உதவியை நாடி நிற்கிறார்; கிடக்கட்டும் என்ற அகங்காரத் தினால் ஒளிந்து இருந்தான். “தருண மங்கையை மீட்பதோர் நெறிதரு கென்னும் பொருள் நயந்துநன்னூல்நெறி யடுக்கிய புல்லில் கருணை யங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி, வருண மந்திர மெண்ணினன் விதிமுறை வணங்கி." 110