பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் கேட்டு உருகி இருக்க வேண்டும். யாருடைய கவியை? கிழியும் படி அடல் குன்று எறிந்தோன் கவியைக் கேட்டு உருகி இருக்க வேண்டும் என்கிறார் அருணகிரியார். இது முதல் பயிற்சி. கவிஞர் உள்ளம் கவியைக் கேட்டால் உருக்கம் உண்டாகுமா? உருக்கத்தை உண்டாக்குவதற்கு அதில் என்ன இருக்கிறது? கவி உண்மையான கவிஞனிடத்தில் பிறக்கிறது. கவிஞனுடைய மனப்பண்போ மலரினுடைய மென்மை, தண்மை மணம் முதலி யவை போன்றது. கடினமான பொருளினிடம் மணம் இராது. மலர் அரும்பாக இருக்கும்போது கடினமாக இருக்கிறது. முனை குவிந்து இருக்கிறது. அப்போது வாசனை இல்லை அதுவே மலரும்போது தண்மை உடையதாக, மென்மை உடையதாக, மணம் உடையதாக ஆகிவிடுகிறது. பக்குவம் அடையாதபோது நம்முடைய உள்ளம் கடினமாகக் குவிந்திருக்கிறது. நல்ல பக்குவம் அடைந்துள்ள கவிஞர்களுடைய உள்ளமோ சிறிய காற்று அடித்தாலும் அசைந்தாடுகிற மென்மை உடையதாகி விடுகிறது. அவர்கள் உள்ளம் விரிந்து கிடப்பதனாலே அவர்கள் காணுகின்ற சின்னஞ் சிறிய சம்பவங்களும் அதில் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன. கலைமகள் தாமரையில் இருக்கிறாள் என்று சொல்வார்கள். வெண்மையான தாமரை அது; மென்மையான தாமரை, மன முள்ள இதழ்களை உடைய தாமரை, அதில் கலைமகள் வீற்றிருக் கிறாள். வெண்டாமரையைப் போன்ற பண்புகளையுடைய உள்ளத்தில் உண்மையான கவிமணம், கலை மணம் கமழ்கிறது என்பது இதன் பொருள். கவிஞனுடைய உள்ளம் விருப்பு வெறுப்பு இல்லாத தூய வெள்ளைத் தன்மை உடையதாக இருக்கும். வேதாந்தியும் கவிஞனும் உள்ளதை உள்ளபடியே பார்க் கிறார்கள். வேதாந்தி பார்க்கிறான்; சொல்வது இல்லை. கவிஞன் பார்க்கிறான்; அழகாகச் சொல்லி விடுகிறான். இவர்களுடைய உள்ளங்கள் வெண்மையாக, தண்மையாக, விரிவாக, மணமுள்ளன வாக இருக்கின்றன. க.சொ.IV-11 f.51