பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி எண்ணித் தொடர்பு கொள்ள நினைக்கிற அறிவுடைய மக்களுக்கு எல்லாக் காலத்திலும் ஆண்டவன் நம்மோடு உறவு உடையவன் என்று நினைக்க நேரம் இல்லை. 'அவனுக்கும் நமக்கும் தொடர்பு உண்டு. அவன் மிகவும் பணக்காரன்; நமக்குச் சொந்தக்காரன். நாம் ஏழையாக வாடுவது தெரிந்தால் அவன் நமக்கு உதவி செய்ய முன் வருவான். அவனோடு தொடர்பு கொண்டு உறவாட வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். வாக்குக்கும் மனத்திற்கும் செயலுக்கும் அப்பாற்பட்டவனாக இருந்தாலும் சரீரம் படைத்த நம்மோடு உறவாடவே அவனும் நாமம் சரீரம் இவற்றோடு, நாம் வாழுகிற குடிசையிலேயே வாழ்கிறான். வீதியிலேயே வாழ்கிறான். நாட்டிலேயே வாழ் கிறான். இந்த மண்மீதே வாழ்கிறான்' என்று நினைக்க நமக்கு நேரம் உண்டோ? இல்லையே! - கண் உடைய மக்களுக்குக் கண்ணினாலே பற்றிக் கொள்ளக் கூடிய உருவமுடையவனாக வருகிறான். வாய் உடைய மக்க ளுக்கு வாயினாலே கூவி அழைப்பதற்குரிய நாமம் உடையவனாக வருகிறான். கையுடைய மக்களுக்கு நீர் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டி, அலங்காரம் பண்ணி, அர்ச்சிப்பதற்குரிய திவ்ய மங்கள சொரூபத்தோடு இருக்கிறான். ஆண்டவன் வசிக்கிற வீதி உலகம். அவன் வீட்டு வாசல் கோயில், அந்தக் கோயிலைக் கண்டு உள்ளே நுழைய வேண்டும். எவனாவது வந்துவிடப்போகிறானே என்று மற்றப் பணக்காரர்களைப் போல அவன் நாயையோ, கூர்க்காவையோ வாசலில் நிறுத்தி வைக்கவில்லை. எப்போது வந்தாலும், எத்தனை பேர்கள் வந்தாலும் 'வாருங்கள், உள்ளே வாருங்கள்' என்று அழைப்பதுபோல, தன் வீட்டு வாசலின் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். உள்ளே நுழைந்து அவனைத் தரிசித்து வாழ்த்தினால் மறுநாள் நாம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் அவன் நம்மைச் சந்திக்க ஓடி வருவான். அத்தனை எளிமை உடையவன். நம் வீட்டுக்கு வந்து நம் கஷ்டங்களைப் பார்த்தால் அவனே நமக்கு உதவி செய்து நம் துன்பத்தைப் போக்கி விடுவான். அத்தனை இரக்கமுடையவன். 'அவனை நாடி நயந்து, வாழ்த்தி வணங்கி, சந்தித்து மனத்திற்கு வருகிற துன்பத்தையும் உடம்புக்கு வருகிற துன்பத்தையும் போக்கிக் கொள்ளவில்லையே! என்று அருணகிரியார் இரங்குகிறார். 245