பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அவர் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு கடைக் காரனிடம் சென்று, 'இன்றே இண்டு ரூபாய் கொடுத்து வைக் கிறேன். பொங்கல் வரும்போது வெல்லத்திற்குத் தட்டு ஏற்பட்டால் என்ன செய்வது? அப்போது இரண்டு வீசை எனக்கு அனுப்பி வைக்கவேண்டும்” என்று சொல்வது போல இருக்கிறது. "வைகாசி மாதம் 6-ஆம் தேதி என் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து விட்டேன். அன்று நீ எங்கும் போகக் கூடாது. என் வீட்டில் மேளம் வாசிக்க வேண்டும்' என்று நாகசுரக்காரருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முன்பணம் கொடுப்பதுபோல இருக் கிறது. 'ஆண்டவனே. இப்போது யமன் வரவில்லை. அவன் இன்று வருவானோ? நாளை வருவானோ? என்று வருவானோ? எனக்குத் தெரியாது. அந்தக் காலனையும் ஆட்டி வைக்கிற மகா காலனாகிய உனக்கு அவன் என்று வருவான் எனத் தெரிந் திருக்குமே! அவன் என்னிடம் வரும்போது, என்னை அவன் தன் பாசத்தினால் பிடிக்கும்போது, நீ வந்து அஞ்சேல் என்று என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறார். நான் வந்து அஞ்சேல் என்று சொல்லவேண்டுமானால் அதற்காக நீ என்ன செய்திருக்கிறாய்?" என்று ஆண்டவன் அவரைப் பார்த்துக் கேட்கலாம். அருணை முனிவர் சொல்கிறார். 'எம்பெருமானே, நான் உன் திருப்புகழைப் படிக்கிறேன். படித்ததை மனனம் செய்கிறேன். ஆகையால் யமன் பாசத்தினால் பிடிக்கும்போது வந்து அஞ்சேல் என்பாய்’ என்கிறார். படிக்கும் திருப்புகழ் போற்றுவன்; கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய். இறைவன் புகழ் திருப்புகழ் என்றாலே இறைவன் புகழ் என்று பொருள். மனிதனுக்கு உண்டாகும் புகழ் புகழாகாது. அது மறைந்துவிடும். உண்மையைப் பார்க்கப் போனால் மனிதன் புகழுக்கு உரியவன் அல்லன். எவன் உண்மையாக ஒரு காரியத்தைச் செய்கிறானோ அவனே புகழுக்கு உரியவன். அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது பழமொழி. உலகில் நிகழும் எல்லாக் காரியங்களுக்கும் இறைவனே பொறுப்பாளி. ஆகவே அந்தக் காரியங்களால் உண்டாகும் புகழும் அவனையே சாரவேண்டும். 18