பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் "பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்.' அவ்வளவுதான். நாமம், வண்ணம், ஊர் இவற்றைக் கேட்டு அறிந்தவுடஅன. அவனிடத்தில் அவளுக்குத் தீராக் காதல் மூண்டது. உள்ளம் கிளர்ந்து பொங்கும் காதலினால் அவன் நினைவாகவே அவள் பிச்சியாக, பைத்தியமாக ஆகி விட்டாள். "பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்." இதுவரைக்கும் அம்மா, அப்பா என்று பயந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்; உலகத்தார் ஆசாரப்படி அடங்கி, ஒடுங்கி வீட்டை விட்டு வெளிக் கிளம்பாமல் வாழ்ந்து வந்தாள். 'பெயர் கெட்டுவிடும்; ஊர் தூற்றும்; மானம் மரியாதை வேண்டாமா?" என்று அம்மா அப்பா, பெயர், ஊர், மானம், மரியாதை ஆகிய எல்லாவற்றையும் விரும்பி வாழ்ந்தாள். ஆனால் ஆரூர்ப் பெரு மானின் நாமம் கேட்டு, வண்ணம் கேட்டு, அவன் உறைவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவன் நினைவாகவே, அவன் வயமாகவே பைத்தியம் கொண்ட பிறகோ? "அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்.' அன்றைக்கே அம்மா அப்பா எல்லாரையும் விட்டு விட்டாள். "அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை." உலகத்தார் ஆசாரம் எல்லாம் போய்விட்டன. ஆறு மணிக்குக் காவிரி போகவேண்டுமே; எட்டு மணிக்கு உலை வைக்க வேண்டுமே; பன்னிரண்டு மணிக்குச் சாப்பிட வேண்டுமே; இரவு ஒன்பது மணிக்கு உறங்கப் போக வேண்டுமே!’ என்கிற நினைப்புக்கள் யாவும் போய்விட்டன. ஊணை மறந்தாள்; உடலை வெறுத்தாள். கடைசியில், "தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே." தன்னையே மறந்துவிட்டாள். பேர் கெட்டுப் போயிற்று. பேர் கெடுவதாவது என்ன? ஜீவபோதம் கழன்றுவிட்டது. 'நான் நான் என்கிற நினைவு அற்றுப் போய்விட்டது. நான் வேறு, தலைவன் வேறு என்கிற நிலை போய், தன் தலைவன் தாளோடு நங்கை சேர்ந்துவிட்டாள். 275