பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் எனக்குப் போதித்தவாறு என்னே' என்பதாக எல்லையில்லாப் பேரின்ப மிதப்பில் பேசுகிறார் அருணகிரியார். அத்தகைய உயர்ந்த ஞானத்தைப் போதித்தவன் யார்? புரையற்ற வேலவன் வரையற்று அவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் மற்றவர்கள் கரத்திலுள்ள வேல் புரையுடையது; பிறருக்குத் துன்பத்தை அளிப்பதனாலே, பிறரோடு சண்டைபோடுவதற்கு உபயோகிப்பதனாலே, மாசு உடையது. ஆனால் முருகனது திருக் கரத்திலுள்ள வேல் சமுதாயத்திற்கு வருகிற இடையூறுகளை நீக்கி, மாயையை நீக்கி, இன்ப நலங்களை விளைவிப்பதனால், குற்றம் இல்லாதது; புரையற்றது. அந்த வேல் மாயையின் பிள்ளையும் அகங்கார மயமானவனுமாகிய சூரனுக்குக் கவசமாக மமகார மயமாக விளங்கிய கிரெளஞ்ச மலையைப் பொடிப் பொடியாக்கி அழிந்து போகச் செய்தது. வரை அற்று. வரை - மலை; கிரெளஞ்ச கிரி. அது மாத்திரமா? அவனைச் சார்ந்திருந்த, எண்ணிக்கையில் அடங்காத அவுணர் கூட்டங்கள் எல்லாம் சிரமற்றுப் போகும்படியாகச் செய்தது. அவுணர் சிரமற்று. கோடிக்கணக்கான அசுரர்களின் தலை அற்றுப்போகும் படி, தலை வேறு உடல் வேறாகும்படி, சங்காரம் செய்தது. அசுரக் கூட்டங்களைத் தனக்குத் துணையாகக் கொண்டு போரிட்டவன் சூரன். அவர்கள் அழிந்தபோது அவர்களுக்குத் தலைவனாக இருந்த அகங்கார உருவமான சூரன் பயந்து ஒடிப் போய்க் கடலுக்குள் மாமரமாக ஒளிந்து கொண்டான். சூரனுக்கு ஒளிய இடம் கொடுத்தது வாரிதி. கடலின்மேல் எம்பெருமா னுக்குக் கோபம் வந்தது. சினந்து தன் வேலை அக்கடலுக்குள் வீசினான்; கடல் நீர் சுவறிப்போய் விட்டது. கடல் நீரை வற்ற அடித்தது அந்த வேல். அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த சூரனையும் சங்காரம் செய்தது. 287