பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் சென்ற பாட்டில் இறைவனுடைய திருவருளை நம்பி அன்புசெய்து, அந்தச் சோதித்த மெய்யன்பினாலே சிறந்த நிலை அடைந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டார் அருணகிரியார். அந்த நிலை பெற்றதன் பயனாக அவருக்குத் தைரியம் உண்டாயிற்று. வாழ்நாளில் வருகிற பெரும் துன்பமாகிய சாவைக் கண்டும் அஞ்சாத உறுதி அவர் உள்ளத்தில் குடிகொண்டது. அதனால் அவர் காலனை அறைகூவப் புறப்பட்டார் "தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கி" என்று தொடங்கும் பாட்டு ஒன்றை நாம் முன்பு பார்த்தோம். காலனைப் பார்த்துப் பாடுகிற முறையில் அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. இங்கும் அதுபோலவே காலனை விளித்துப் பாடுகிறார். காமனும் காலனும் காமனையும் காலனையும் வெல்வது பெரிய மனிதர் களுக்குக்கூட முடியாத காரியம். மனிதன் வாழ்நாளில் உரம் மிக்க போது காமன் தொந்தரவு செய்கிறான். உரம் போன பிறகு காலன் துன்பம் இழைக்க வருகிறான். இந்திரியங்கள் எத்தனைக்கு எத்தனை வளர்ச்சியும் உரமும் பெறுகின்றனவோ அத்தனைக்கு அத்தனை அவற்றுக்குப் பசி அதிகமாகிறது. மேலும் மேலும் நுகர்கிற பொருள் வேண்டுமென்று கேட்கின்றன. அவற்றுக்குத் தேவையான அத்தனையையும் கொடுத்து நிறைவு பெறலாம் என்றால், அந்த நிலை எப்பொழுதுமே மனிதனுக்கு வருவது இல்லை. இந்திரியங்களின் அநுபவத்திற்கு எல்லையே இல்லை. ஏதேனும் ஒர் எல்லையிருந்தால் இந்திரிய நுகர்ச்சி பெற்று இதோடு போதும் என்ற நினைவு உண்டாகும். ஆனால் எத்தனைக்கு எத்தனை நாம் இந்திரியங்களின் பசியைத் தணிக்க முற்படுகிறோமோ அத்தனைக்கு அத்தனை மீண்டும் மீண்டும்