பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மயிலின் இயல்பு அந்த மயிலும் ஆண் மயில். ஆண் மயில் அழகிய தோகையை விரித்து ஆடும் தன்மையுடையது. எம்பெருமான் அதன் மேலே ஏறிக் கொண்டு வரும்போது அது மிக்க மகிழ்ச்சியினால் தன் னுடைய தோகையை விரித்துக் கொண்டு ஆடுகிறது. மேகங்கள் வானத்தில் பரந்து நிற்கும்போது மயிலும் ஆடும். இங்கே ஆண்டவனுடைய திருவருளாகிய தண்ணிய மழையைப் பொழி வதற்கு முன்னாலே, அதற்குரிய சூழ்நிலையாகிய மேகம் கப்பிக் கொண்டிருக்கும்போது, நம்முடைய ஆண்டவன் பல பக்தர்களை ஆட்கொள்ளப் போகிறான் என்ற எண்ணத்தோடு தன்னுடைய தோகையை விரித்து மயில் ஆடுகிறது. . சூரபன்மனாகிய மயில் சூரபன்மன் தன்னுடைய குணங்கள் எல்லாம் மாறி இறைவ னுடைய ஞானவேலின் பரிசம் பெற்ற மாத்திரத்தில் அகங்காரம், மமகாரம் ஆகிய இரண்டையும் விட்டு, கோழியாகவும், மயிலா கவும் ஆனான் என்ற கதையைப் பல தடவைகள் நினைப்பூட்டி யிருக்கிறேன். சூரன் உருவம் மாறிவிட்டது. அவன் ஆத்மாவை எம்பெருமான் பெருங்கருணையினால் தனக்கு வாகனமாகக் கொண்டான். 'நம்முடைய காலத்தில் நாம் இறைவனை வணங்காமல், அவன் பேரருளுக்குப் பாத்திரமாக வேண்டுமென்று ஏங்கி நிற்காமல் எத்தனையோ தவறான காரியங்களைச் செய்தோம். அப்படி இருந்தும் எம்பெருமான் நம்மை ஆட்கொண்டான். தம்மை நச்சி நிற்பார்களுக்கு அருள் செய்கிற பிற மூர்த்திகளைப் போலல்லாமல், தன்னை எதிர்த்து வந்தாலும் தன் சந்நிதானத்தில் நிற்கிறான் என்ற ஒரே தகுதியை எண்ணி ஆட்கொள்ளும் பெருங் கருணையாளன் இவன். போர் முகத்தில் இவனை எதிரியாக வைத்து இவன் முன்னிலையில் நின்றமையினால் இவனது வாகனமாகக் கூடிய தகுதியைப் பெற்றோம்' என்று நினைப்பது அந்த மயில். இவ்வாறு வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை, வாகன மாகும் உயர்ந்த நிலை, சூரனுக்குக் கிடைத்தது. முருகன் பேரருளை 3.48